பக்கம்:மேனகா 1.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120

மேனகா

பஞ்சே ரடியா யிழைபா லுறையு
நெஞ்சே யெனை நீயு நினைந்திலையோ?”

என்ன, அவனுடைய மனதும் உயிரும் அறைக்குள்ளிருந்த பொற்பாவையிடத்தில் இருந்தனவன்றி, அவனது வெற்றுடம்பு மாத்திரம் அவனுடன் இருந்தது; வேறு துணையற்று, முற்றிலும் தன் வயத்திலிருந்த கேவலம் மெல்லியவளான ஒரு பெண் தன்னை அன்று ஏமாற்றியதை நினைத்து நெடுமூச்செறிந்தான்; நல்ல தருணத்தில் கத்தியொன்று குறுக்கிட்டு தனது எண்ணத்தில் மண்ணைப் போட்டதை நினைத்து மனமாழ் கினான். எப்படியாயினும் அன்றிரவு கழியுமுன்னம் அவளைத் தன் வயப்படுத்த உறுதி கொண்டான். அவ்வளவு பாடுபட்ட அப்பெண், அன்றிரவு முழுதும் விழித்திருக்கமாட்டா ளென்றும், அவள் நெடுநேரம் விழித்திருக்க முயலினும், இரண்டு மூன்று மணி நேரத்திலாயினும் சோர்வும், துயிலும் அவளை மேற்கொள்ளுமென்றும், அப்போது அவளுக்கருகில் இருக்கும் கதவைத்திறந்து கொண்டு மெல்ல உட்புறம் சென்று அவள்கரத்திலிருந்த கத்தியை பிடுங்கி விட்டால், அவளுடைய செருக்கு ஒழிந்துபோமென்றும், தனது எண்ணம் அப்போது நிறைவேறிப்போ மென்றும் நினைத்து மனப்பால் குடித்தான். உரலில் அகப்பட்ட பொருள் உலக்கைக்குத் தப்புதலுண்டோ? எவரும் கண்டறியக்கூடாத தன் சயன அறையில் வந்து அகப்பட்டுள்ள பெண் இனி தப்பிப்போவதுண்டோ! ஒருநாளும் இல்லையென்று நினைத்தான். அவளுடைய அற்புத வடிவமும் இளமையும் கட்டழகும் காந்தியும் இனிய சொற்களும் அவன் மதியை மயக்கி மையலை மூட்டி அவனை உலைத்து வதைத்து வாட்டின. தனக்குள் ஐந்து லட்சம் ரூபாய் பெறுமான முள்ள செல்வமெல்லாம் அவள் பொருட்டு அழிந்தாலும் கவலையில்லை. அத்துடன் தனது உயிர் போவதாயினும் இலட்சியமில்லை. அப்பெண்மணியைத் தனது கைக்கொண்டு தீண்டினால் போதும் என்று பலவாறு நினைத்து மதோன்மத்தனாய்க் காமாதுரனாய் ஜுரநோய் கொண்டு இருக்கை கொள்ளா மெய்யினனாய்த் தத்தளித்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/138&oldid=1249793" இலிருந்து மீள்விக்கப்பட்டது