பக்கம்:மேனகா 1.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122

மேனகா

விளக்கின் ஒளியில் பளபளவென்ன மின்னிய அவனுடைய கட்டிலின் மீது, வெண்மேகங்களினிடையில் தவழும் மூன்றாம் பிறைச் சந்திரனைப்போல, அந்த வடிவழகி படுத்திருந்தாள். இன்னமும் அவளோடு போராடவேண்டுமோ வென்னப் பெரிதும் அச்சங்கொண்டு வந்த தனக்குக் கும்பிடப்போன தெய்வம் குறுக்கிட்டதைப்போல தன் விருப்பம் எளிதில் நிறைவேறியிருத்தலைக்கண்டு பேருவகை கொண்டான். பொற் பதுமையோ வென்னத் தோன்றிய மேனியும், உயர்ந்த பட்டுப் புடவையும், வைர ஆபரணங்களும் ஒன்று கூடி மின்சார வொளியில் கண்கொள்ளாச் சேவையாய் ஜ்வலித்தன. அது தெய்வலோகக் காட்சிபோலவும் அவள் கந்தருவ ஸ்திரீயைப் போலவும் தோன்றக் கண்ட யெளவனப் புருஷன் காதல் வெறியும் கட்டிலடங்கா மோகாவேசமும் கொண்டான். ஒரே பாய்ச்சலாய்ப் பாய்ந்து அவளை அணைக்க நினைத்தான். அவள் ஒருகால் தன்னைக் கத்தியால் குத்திக்கொண்டு இறந்து கிடக்கிறாளோ வென்று உற்று நோக்கினான். உதிரமும் சவத்தோற்றமும் காணப்படவில்லை. இதழ்களை மூடிச் சாய்ந்திருக்கும் தாமரை மலரைப்போல அவள்துவண்டு கிடந்த தோற்றம் அவளது துயிலைச் சுட்டியது. அவள் தனது முகத்தை அப்புறம் திருப்பி மெத்தையில் மறைத்திருந்தாள். “ஆகா! நாணத்தினால் அல்லவா முகத்தை மறைத்துக் கொண்டிருக்கிறாள். கடலின் ஆழத்தைக் கண்டாலும் காணலாம்; பெண்களின் மனத்தைக் கண்டு பிடிக்க எவராலும் ஆகாது; இவளும் என்மீது விருப்பத்தைக் கொண்டே என்னிடம் இவ்வளவு நேரம் போராடிப் பகட்டெல்லாம் காட்டியிருக்கிறாள். ஆண் பிள்ளைகளே எளிதில் ஏமாறும் மூடர்கள். என் மனதைச் சோதிப்பதற்கல்லவோ இவள் இந்த நாடகம் நடித்தாள். நான் தன்னிடம் உண்மை அன்பைக் கொண்டிருந்தேனோ, நெடுங்காலம் தன்னை வைத்து ஆள்வேனோ, அன்றி மோகம் முப்பது நாள் ஆசை அறுபது நாளென சிறிது காலத்தில் விலக்கி விடுவேனோ வென்று ஆராய்ந்திருக்கிறாள். ஆகா! என் கண்மணி! உன்னால் நான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/140&oldid=1251029" இலிருந்து மீள்விக்கப்பட்டது