பக்கம்:மேனகா 1.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வேடச்சிறான்கை மாடப்புறா

125

பொறாமையும் எரிச்சிலும் உண்டாய்விடும். தானும் சுகங் கொடாள்; பிறரிடம் பெறுவதையும் தடுப்பாள். அவளிடம், நான் வேறு பெண் முகத்தையே பார்த்தறியாதவன் என்று ஆயிரம் சத்தியம் செய்து தினம் ஒவ்வொரு புதிய மங்கையை அநுபவித்துவிட்டேன். நீ யாவரினும் மேம்பட்டவளாக இருப்பதால், இனி நீயே எனக்கு நிரந்தரமான பட்டமகிஷி. நான் இனி உன்னை யன்றி பிறர் முகத்தைக் கண்ணெடுத்தும் பார்ப்பதில்லை. என் மனைவியையும் நாளைக்கே ஒழித்து விடுகிறேன். உன்னுடைய காந்தியல்லவோ காந்தி! நூர்ஜஹான் (ஜெகஜ்ஜோதி) என்று என் பெண்ஜாதிக்கு வைத்திருக்கும் பெயர் உனக்கல்லவோ உண்மையில் பொருந்துகிறது! அந்த எருமைமாட்டை இனி நான் பார்ப்பதே இல்லையென்று அல்லா அறியச் சொல்லுகிறேன்” என்று தனது மனைவியை இகழ்ந்தும், மேனகாவைத் துதித்தும், நினைத்த விதம் பிதற்றி அப்பெண்மணியின் அருகில் தலையணையில் சாய்ந்து முரட்டாட்டமாய் அவளை இறுகக் கட்டி அவளுடைய முகத்தைத் தனது பக்கம் திருப்பி விரைவாகத் தனது ஆத்திரத்தை யெல்லாம் ஒன்றாய்ச் சேர்ந்து அவள் முகத்தில் முத்தமிட்டான். அதனால் விலக்க முடியாத இன்பத்தைக் கொண்ட அம் மங்கை அருவருத்த புன்னகை காட்டி நெடுமூச் செறிந்து தனது கண்களை நன்றாகத் திறந்தாள். அத்தனையும் பொறித் தட்டுதலைப் போல ஒரு நொடியில் நிகழ்ந்தன. பசுத்தோலில் மறைந்திருந்த புலியைப் போல, அம் முகம் அவனுடைய மனைவி நூர்ஜஹானின் முகமாய் போய்விட்டது. அவள் மேனகா வன்று; அவனுடைய மனைவி நூர்ஜஹானே அவ்வாறு படுத்திருந்தவள். தின் பண்டம் வைக்கப்பட்டிருந்த பாத்திரத்தில் கையைவிட, அதிலிருந்து நாகப் பாம்பு புஸ்ஸென்று படமெடுத்துக் கிளம்புதல் எவ்வாறிருக்கும்? அதைப் போல அந்தக் காட்சி தோன்றியது. அவனுடைய வஞ்சகத்தை இன்னொரு வஞ்சகம் வென்றுவிட்டது. அவள் அங்கு எப்படி வந்தாள், மேனகா எப்படி போனாள், மேனகாவின் புடவை, இரவிக்கை, ஆபரணங்கள் முதலியவை அவள்மீது எப்படி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/143&oldid=1250183" இலிருந்து மீள்விக்கப்பட்டது