பக்கம்:மேனகா 1.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மேனகாவின் கள்ளப்புருஷன்

127

அவ்விடத்தில் உள்ளூறப் பெரும் பயத்தைக் கொண்டிருந்தனர் என்றாலும், அதை வெளியிற் காட்டாமல் மிகவும் பாடுபட்டு மறைத்து, முகத்தில் அருவருப்பைக்காட்டி ஏதோ அலுவலைச் செய்தவராய் அவனைப் பொருட்படுத்தாமல் இருந்தனர். மேனகாவுக்கு அவன் கொடுத்த செல்லத்தினால் அவர்கள் பெரிதும் தாழ்வும் அவமானமும் அடைந்தவரைப் போலத் தோன்றினர்.

பெருந்தேவி மாத்திரம் மெல்ல முணுமுணுத்த குரலில், “தஞ்சாவூரில் இல்லாவிட்டால் இன்னொரு திருவாரூரில் இருக்கிறாள். வீட்டை விட்டு வெளிப்பட்ட கழுதை எந்தக் குப்பை மேட்டில் கிடந்தா லென்ன? அவளுடைய அப்பன் அவளை எங்கே கொண்டு போனானோ? யாருக்குத் தெரியும்? அந்தப் பீடையின் பேச்சை இனி என் காதில் போடாதே யப்பா; நீயாச்சு உன் மாமனாராச்சு; எப்படியாவது கட்டிக் கொண்டாடுங்கள்” என்று மிக்க நிதானமாகவும் அழுத்தம் திருத்தமாகவும் தாட்சண்யம் பாராமலும் கூறினாள்.

வராகசாமியின் மனோநிலைமை எப்படி இருந்தது? எல்லாம் குழப்ப மென்று ஒரே சொல்லால் குறிப்பதன்றி, விவரமாய் எதைச் சொல்வது? எதை விடுப்பது? உலகமே தலை கீழாக மாறித் தாண்டவமாடுவதாயும், அதிலுள்ள ஒவ்வொரு பொருளும் சுழல்வதாயும், தானும் தன் வீட்டுடன், சகோதரிமார் சமேதராய், இறகின்றி ஆகாயத்தில் கிளம்பிக் கரணம் போடுவது போலத் தோன்றியது. தான் செய்வது இன்ன தென்பதும், தனது அக்காள் சொன்னது இன்ன தென்பதும் தோன்றப் பெறானாய்த் தனது தெள்ளிய உணர்வை இழந்து, ஆத்திரமே வடிவாய்த்துயரமே நிறைவாய் நிற்க, அவன் வாயில் மாத்திரம் அவனறியாமல் சொற்கள்தாமாய் வந்தன. முகத்தில் கண்கள், நாசி, உதடு, புருவம், கன்னம் முதலிய ஒவ்வொரிடத்திலும் குழப்பம் குழப்பம் குழப்பம் என்பதே பெருத்த எழுத்தில் எழுதப்பட்ட விளம்பரம் போலக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/145&oldid=1250185" இலிருந்து மீள்விக்கப்பட்டது