பக்கம்:மேனகா 1.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மேனகாவின் கள்ளப்புருஷன்

133

அடித்துக் கொள்ளுகிறாயே! வராகசாமிக்கு நான் கொண்டு போன காப்பியை என் கையிலிருந்து அவள் பிடுங்கிக் கொண்டு போனாளென்று நான் உடனே சொன்னேனே நீ காதில் வாங்கினாயா? அதில் தானே மருந்தைப் போட்டாள். அப்போதே கையும் மெய்யுமாய்ப் பிடித்துக்கொண்டால் காரியம் இவ்வளவுக்கு வருமா? அவளுடைய ஜாலமெல்லாம் பலிக்குகமா? இப்போது படு; உனக்கு வேண்டும்.

பெருந்தேவி :- நானா அதை கவனிக்க வில்லை? நீ அப்படி நினைத்துக் கொண்டிருக்கிறாய்! நான் நடந்ததை யெல்லாம் கவனித்தேன். அவள் காப்பியை உன் கையிலிருந்து பிடுங்கிக்கொண்டு போனதும் தெரியும். படுக்கையறை யிலிருந்த தன்னுடைய டிரங்குப் பெட்டியைத் திறந்ததும் தெரியும். அதிலிருந்து ஏதோ மருந்தை யெடுத்துக் காப்பியில் போட்டதும் தெரியும். அப்போது புது மோகம் தலைக்கேறி யிருந்தது. நாம் சொன்னால் ஐயங்கார்வாளுக்குப் பொய்யாக இருக்கும். எப்படியாவது இரண்டு பேரும் ஒன்றாயிருந்து சுகப்படட்டும். நான் ஏன் அதைத் தடுக்கவேண்டு மென்று பேசாமலிருந்து விட்டேன்; இந்த மாதிரி அடிமடியில் அவள் கைபோட்டது இப்போது தானே தெரிகிறது.

கோமளம்:- இதுவரையில் வராகசாமி நமக்கெதிரில் அவளிடம் நெருங்கிப் பேசவும் கூச்சங்கொள்வான். இந்த ஐந்து நாளிலும் அவளை ஒரு நிமிஷங்கூட விடாமல் அவளுடைய புடவைத் தலைப்பைப் பிடித்துக்கொண்டே அலைந்தானே சுய புத்தியோடு இருக்கிற ஒரு ஆண்பிள்ளை இப்படித்தானா பெட்டைமோகினி பிடித்தலைவான்? அவள் குளிக்கப் போனால் அங்கே இவன் அவளுடன் இளிக்க வந்துவிடுவான். புடவை உடுத்திக்கொள்ள அவள் மறைவிற்குப் போனால் நான் ஆண்பிள்ளை அல்லவென்று சொல்பவனைப்போல இவனும் அவ்விடத்தில் ஆஜர். மிட்டாயிக் கடையைக் கண்ட பட்டிக்காட்டான் என்பார்கள். அப்படி யல்லவா இவன் தேன் குடித்த நரி மாதிரி ஆய் விட்டான். இந்தத் தடவை எல்லாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/151&oldid=1250201" இலிருந்து மீள்விக்கப்பட்டது