பக்கம்:மேனகா 1.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136

மேனகா

இதெல்லாம் அந்த சூனியக்காரக் கிழவியின் யோசனையடா; உனக்கென்னடா தெரியும்? வெளுத்த தெல்லாம் பால் கறுத்த தெல்லாம் நீர்! அடித்தால் உனக்கு ஒழுங்காக அழக்கூடத் தெரியாதே - என்றாள்.

அதைக்கேட்ட வராகசாமியின் மனோ நிலையை என்ன வென்று சொல்வது? பாம்பு கடிக்கப் பெற்றவன் படிப்படியாய்த் தனது தெளிவான அறிவையும் உணர்வையும் இழந்து மயங்கித் தடுமாறுதலைப்போல அவனுடைய நிலைமை மேன்மேலும் பரிதாபகரமாக மாறியது. அது கனவு நிலையோ அல்லது நினைவு நிலையோ வென்பது சந்தேகமாய்ப் போனது. மேனகா போனது கனவா, அன்றி அக்காள் சொல்வது கனவா என்பது தோன்றவில்லை. மேனகா காணாமற்போனதும் உண்மையாய்த் தோன்றியது. அக்காள் சொன்னதும் நிஜமாய்த் தோன்றியது. அடுத்த நிமிஷம் இரண்டும் பொய்யாகத் தோன்றின. அக்காளுடைய யூகத்திற்கும் தந்திக்கும் சிறிதும் பொறுத்தமில்லை யென்பது அவன் மனதில் நன்றாய்ப் பட்டது. அவனுடைய மனதில் வேறு எத்தனையோ சந்தேகங்கள் உதித்தன. அவனுக்கு இயற்கை யிலேயே அக்காளுடைய சொல்லில் நம்பிக்கையுண்டு. ஆகையால், அப்போதும் அவள் சொன்னதை அசட்டை செய்ய அவனது மனது துணியவில்லை. டிப்டி கலெக்டர் அனுப்பிய செய்தியும் பொய்யல்லவென்று தோன்றியது. அது நிஜமா அல்லது இது நிஜமாவென்பதை நிச்சயமாய் அறிய மாட்டாதவனாய்த் தடுமாறினான். “அதிருக்கட்டும் பெண் தமது வீட்டிலிருந்தால் போலீசில் பதிவு செய்யும்படி நமக்கு எழுதுவாரோ? பின்பு அது அவருக்குத்தானே உபத்திரவமாய் முடியும்” என்றான்.

பெரு: அதெல்லாம் வெளிக்கு ஆடும் நாடகமப்பா; நான் அடிப்பது போல அடிக்கிறேன் நீ அழுவதுபோல அழு என்னும் கதையப்பா; அது எங்களுக்காக எழுதியனுப்பின சங்கதி யல்லவா; நீ போலீசில் பதிவு செய்ய மாட்டா யென்பது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/154&oldid=1250204" இலிருந்து மீள்விக்கப்பட்டது