பக்கம்:மேனகா 1.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மேனகாவின் கள்ளப்புருஷன்

139

விட்டால் இங்கும் இல்லை. அவன் வாசலில் நின்றால் நான் கொல்லையிற் போய் நிற்போம் - என்றாள்.

வராகசாமியின் கண்ணைக் கட்டி காட்டில் விடப்பட்ட வனைப் போல ஒன்றையும் அறிய மாட்டாதவனாய்த்தத்தளித்து நின்றான். அவன் மனதோ மேனகாவைப் பற்றி கவலை கொண்டுதுடித்தது. அக்காள் சொன்னது அவனுக்கு ஒரு சிறிதும் மன அமைதியை உண்டாக்க வில்லை. டிப்டி கலெக்டர் பெண்ணை அழைத்துப் போகவில்லை யென்று எழுதியிருக் கையில், அவரே அழைத்துப் போனவரென்று நினைப்பது பொருத்தமற்ற தென்றும் தவறான விஷயமென்றும் எண்ணினான். அவளை அவர் அப்படி அழைத்துப்போகக் கூடிய மூடன் அல்ல என உறுதியாக நினைத்தான்.

அவன் இயற்கையில் நற்குணம் உடையவன் ஆதலாலும், அவன் தனது சகோதரிமாரின் மீது வைத்த நம்பிக்கையாலும், “பொய்யுடை யொருவன் சொல்வன்மை யினால் மெய்போலும்மே” என்றபடி பெருந்தேவியும், கோமளமும் வாயடியடித்து உடாய்த்தமையாலும் அவனுக்கு அவர்கள் மீது எவ்விதச் சந்தேகமும் தோன்றவில்லை. மேனகா வேறு எவ்விதம் காணமற்போயிருப்பாளோ வென்று நினைத்து நினைத்து பெருங் குழப்பமடைந்து திகைத்துப் பேச்சுமூச்சற்று உட்கார்ந்து விட்டான். அவனைப் போலவே குழப்பங்களைக் கொண்டு ஒன்றையும் அறியாதவரைப் போல நடித்த சாமாவையர், “அவள் மறைந்து போனது சொப்பனமாக வல்லவோ இருக்கிறது! அவர் இப்படியும் அழைத்துப் போவாரோ? நல்ல பெரிய மனிதரான அவருக்குத் தெரியாத காரியம் உண்டா? பெண் இனிமேல் புருஷனுடன் வாழவேண்டாமா? அவர் நல்ல படிப்பாளி; கண்ணியம் பொருந்திய மனிதர்; அவர் இவ்விதம் அழைத்துப் போயிருப்பாரா வென்பதே எனக்குப் பெருத்த சந்தேகத்தைத் தருகிறது” என்றார்.

பெருந்தேவி பெரிதும் ஆத்திரமடைந்து, “போடா; நீ மகா புத்திசாலி! பெரிய மனிதனையும், படித்த மனிதனையும் நீதான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/157&oldid=1251033" இலிருந்து மீள்விக்கப்பட்டது