பக்கம்:மேனகா 1.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மேனகாவின் கள்ளப்புருஷன்

147

மொழி, தாயுமானவர் பாடல், பாரதம், பாகவதம், பதார்த்தகுண சிந்தாமணி, சரீர தத்துவ சாஸ்திரம், வைத்திய சாஸ்திரம், மருத்துவம், பாகசாஸ்திரமும், சுகாதார விளக்கம் முதலிய புஸ்தகங்களும், ஒரு நாவல் புஸ்தகமும் இருந்தது. நமது புராதனப் பழக்க வழக்கங்களிலேயே பயிற்றப்பட்ட மேனகா நாவலும் வைத்திருந்தாளோ வென்னும் சந்தேகம் சிலருக்கு உதிக்கலாம். ஆனால், தற்காலத்தில் நமக்கு ஒழுக்கம் பயிற்றும் நாவலாசிரியர்களால் எழுதப்படும் நிகரற்ற நாவல்கள் எதையும் அவள் வைத்திருக்க வில்லை. தமது சுயப்புலமையால் பெருத்த பண்டிதர்களால் எழுதப்பட்டு ஏராளமான சாற்றுக்கவிகளுடன் பிழையறத் தோன்றும் நாவல்களில் எதையும் அவள் வைக்கவில்லை. தோன்றாத் துணையாயிருந்து உதவும் கடவுளின் அருள்வாக்காய் அமைந்துள்ள கமலாம்பாள் சரித்திரமே அதில் காணப்பட்டது. வராகசாமி அவ்வாறு அவளுடைய புஸ்தகங்களைப் பரிட்சை செய்ததில் அவனுடைய அருவருப்பு அதிகரிக்கவில்லை. அவன் அவள் மீது எவ்விதமான குற்றமும் கூறுதற்கு இடமில்லாமல் போயிற்று. புஸ்தகங்களை முன்போலக் கட்டி வெளியில் வைத்தான். பெட்டியில் புஸ்தகக்கட்டு முதலில் இருந்ததற்கு அடியில் பெருத்த அற்புதமான தந்தப் பெட்டி யொன்று காணப்பட்டது. அதன் வேலைத் திறமும், அழகும் அவனுடைய கண்ணைப் பறித்தன. அந்தப்பெட்டியை மெல்ல வெளியில் எடுத்தான். அது பூட்டப்பட்டிருந்தாலும் அதன் திறவுகோல் அதன் பக்கங்களிலிருந்த வளையமொன்றில் கட்டப் பட்டிருந்தது. அதையெடுத்துப் பெட்டியைத் திறந்தான்.

அதுகாறும் மற்ற மூவரும் வாய்பேசாமல் அருகில் நின்று கவனித்தனர். அப்போது பெருந்தேவி, “அடே! அதையெல்லாம் திறக்காதே; அதனால் வீண் மனஸ்தாபம் வந்து விளையும்; பணக்காரன் வீட்டுப்பெண்; விலை உயர்ந்த சாமான்கள் இருக்கின்றன. ஏதாவது போகும் குறையும்; அந்த வம்பு நமக்கேன் பேசாமல் வைத்துவிடு!” என்று சொல்லி விட்டு சாமாவையரைப் பார்த்தாள். அவர் சிறிது புன்னகை கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/165&oldid=1251037" இலிருந்து மீள்விக்கப்பட்டது