பக்கம்:மேனகா 1.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மேனகாவின் கள்ளப்புருஷன்

155

கோமளம்:- கழுத்தில் காசுமாலை இருக்கிறதே! ஆண்பிள்ளை காசுமாலை போட்டுக்கொள்வதுண்டோ?

பெருந்தேவி:- ராஜாக்களும், தெய்வமும் எந்த ஆபரணத்தையும் அணியலாம்.

சாமா:- சேச்சே! காசுமாலையா அது? இல்லை இல்லை. தங்க மெடல்களை மாலையாகப் போட்டிருக்கிறார். இவர் யாரோ மகாராஜாவைப் போலிருக்கிறார். ஏதோ ஒரு விஷயத்தில் மகா நிபுணர் போலிருக்கிறது. மெடல்கள் பெற்றிருக்கிறார். அதிருக்கட்டும். கடிதத்தைப் படி - என்றார்.

உடனே கடிதங்களில் ஒன்றை யெடுத்த கோமளம் அடியிற் கண்டவாறு படித்தாள்:

“பெண்மணியும் என்னிரு கண்மணியும் என் மனதைக்கொள்ளை கொண்ட விண்மணியுமான என் அருமைக் காதலி மேனகாவுக்கு மனமோகன மாயாண்டிப் பிள்ளை எழுதும் கடிதம்”

பெருந்தேவி:- (திகைத்து) என்னடா இது கிணறு வெட்டப் பூதம் புறப்பட்ட கதையாயிருக்கிறதே! - என்றாள்.

சாமாவையர் அந்த அதிசயச் செய்தியைத் தாங்க மாட்டாமற் குழம்பிப்போன தனது தலையைத் தடவிக் கொடுத்து மெளனம் சாதித்தார்.

கோமளம் மேலும் படிக்கிறாள்:-

“என் காதற் கண்ணாட்டி! என் அருமைப் பெருமாட்டி! என் ஆசைச் சீமாட்டி பச்சை மட மயிலே பவளவாய்ப் பைங்கிளியே! என் மனதிலுள்ள விஷயத்தை உனக்கு எப்படித் தெரிவிக்கப்போகிறேன். நாங்கள் தஞ்சாவூருக்கு வந்த இந்த எட்டுமாத காலம், நாமிருவரும் ஒரு நாள் தவறாமல் சந்தித்துக் கூடி அநுபவித்த பேரின்ப சுகம் எப்போதும் நீடித்திருக்கும் என்றல்லவா
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/173&oldid=1250241" இலிருந்து மீள்விக்கப்பட்டது