பக்கம்:மேனகா 1.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

158

மேனகா

எதிர்பார்த்திருப்பேன். நீ வீட்டிற்குப் போகுமுன் அங்கு வந்து எனக்குக் கடைசி முறையாக இன்பங் கொடுத்துப் போவாயென்று நம்புகிறேன். அப்போது யாவற்றையும் நேரில் பேசிக் கொள்வோம்.
இப்படிக்கு உன் அடிமை,
மனமோகன மாயாண்டிப்பிள்ளை

என்று ஒவ்வொர் எழுத்தும் கணீரென்று தெளிவாக வராகசாமியின் காதில் ஒலிக்கும்படி கோமளம் படித்து முடித்தாள். யாவரும் பேச்சு மூச்சற்ற சித்திரப் பதுமைகளைப் போலத் தோன்றினர். கோமளம் விரைவாக இன்னொரு கடிதத்தையும் எடுத்து அடியில் வருமாறு படித்தாள்.

“என் மாங்குயிலே! மடவன்னமே! நான் உன்னுடைய வீட்டிற்கு அனுப்பிய வேலைக் காரியின் மூலமாக உனது விஷயங்களை அறிந்தேன். உன்னுடைய சாமர்த்தியமும், இனிய குணமும் வேறு எவருக்கேனும் வருமோ? நீ புருஷனுக்குக் கடிதம் எழுதி அவனை ஏமாற்றியதும், இங்கு வந்தபின் அவனுடன் கொஞ்சிக் குலாவி அவன் சந்தேகமடையா வகையில் நடந்து அவன் மதியை மயக்கியதும் கேள்விப்பட்டேன். இன்றிரவு உன் கணவன் சேலத்திற்குப் போகிறான் என்பதைக் கேள்விப் பட்டேன். இன்றிரவு எனக்கு அம்பாள் தரிசனம் கிடைக்கப் போவதைக் குறித்து நான் அடையும் ஆநந்தத்தை எப்படி உனக்கு நான் தெரிவிப்பேன்? இன்றைக்கு ராத்திரியே நான் உன்னை அழைத்துக் கொள்கிறேன். இன்றோடு நமது கலி நீங்கப் போகிறது. ராத்திரி ஒன்பது மணிக்கு நானும் என் சமையற்காரனும் ஒரு வாடகைப் பெட்டி வண்டியில் வருவோம்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/176&oldid=1250463" இலிருந்து மீள்விக்கப்பட்டது