பக்கம்:மேனகா 1.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168

மேனகா

மேனகாவுக்குப் பிரதிகூலமாயிற்று. என்ன செய்வாள் அதற்கு மேல் அப்பீல் செய்ய வழியில்லை; தீர்மானமும் நிறை வேற்றப்பட்டு வராகசாமியின் மனதிலிருந்த மேனகாவின் பொருளான காதல் முற்றிலும் ஜப்தி (பறிமுதல்) செய்யப்பட்டுப் போனது. அத்தகைய நிலைமையில் வராகசாமியின் மனதில் அடக்கவொண்ணாப் பெருங் கோபம் கொந்தளித்துக்கொண்டிருந்தது. மலைகளைப் பெயர்த்துக் கடலில் வீட்டி, கடலை வாரி ஆகாயத்தில் எறிந்து, உலக மண்டலங்களை யெல்லாம் அம்மானைக் காய்களாக வீசி, அண்டத்தையும், பகிரண்டத்தையும், நிலத்தையும், நீரையும், மலையையும், மரங்களையும் ஒன்றாய்ச் சேர்த்துக் கதம்பம் செய்யத்தக்க சண்டமாருதம் ஒரு சிறிய வீசம் படி உழக்கிற்குள் தனது முழுவல்லமையையும் காட்டுதலைப் போல அவன் மனதில் பெருங் கோபம் மூண்டெழுந்து விவரித்தற்கு ஏலாத் துன்பம் செய்தது. தன் மனதைவிட்டு ஒரு நொடியேனும் அகலாமல் பிடிவாதமாய் எதிரில் வந்து நின்ற மேனகாவின் கபடமற்ற கலியான குணம் ஒளிர்ந்த இனிய சுந்தரவதனத்தைக் காணக்கான அவனுடைய ஆத்திரம் பெருகிக் கட்டிலடங்கா நிலையை அடைந்தது. அந்த வடிவத்தை நோக்கில் பல்லை நறநற வென்று கடித்து உருட்டி விழித்து ஒரே அடியில் அவளுடைய தேகமாகிய வஞ்சகப் பாண்டத்தை உடைத்துப் பொடியாக்கிக் காற்றில் ஊதிவிட நினைத்தான். தாயின் மடிமீதிருக்கும் குழந்தை, அவள்பார்க்கும் முகக்கண்ணாடியை நோக்கி அதற்குள் தன் தாயிருத்தலையறிந்து கண்ணாடியின் பின் புறத்தைத் தடவிப் பார்த்தலைப் போல அவனுடைய அகக்கண்ணில் தோன்றிய வடிவமே அவனுக்கு உண்மை மேனகாவைத் தோன்றியது.

“அடி வஞ்சகி! பரம சண்டாளி! துரோகி” என்ன காரியம் செய்தாய்; உன் புத்தி இப்படியா போனது! சே! என்முன் வராதே; போ அப்பால் பீடையே! முகத்தைப் பார். சிரிப்பென்ன? கொஞ்சலென்ன? யாரிடத்தில் இந்தப் பகட்டெல்லாம்? உன்னுடைய மோசத்தைக் கண்டுகொள்ளக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/186&oldid=1250705" இலிருந்து மீள்விக்கப்பட்டது