பக்கம்:மேனகா 1.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிச்சையெடுத்தது பெருமாள்; பிடுங்கித்தின்றது அனுமார்.

179

சொன்னாயே; இவன் நம்பினானா பார்த்தாயா! கடிதங்களைக் கண்டவுடனே நம்பி விட்டானே. என்னுடைய யோசனை எப்படி வேலை செய்தது பார்த்தாயா?

பெரு:- ஆமாம்; நல்ல யோசனைதான்.

சாமா:- (இறுமாப்பாக) இதனால்தான் எல்லாவற்றிற்கும் என் யோசனையைக் கேட்டுச் செய்யுங்கள் என்று சொல்வது. இன்னொரு முக்கியமான விஷயம். அநேக வீடுகள் பார்த்தேன். சிறிய பன்றி குடிசைகளுக் கெல்லாம் நாலாயிரம் ஐயாயிரம் கேட்கிறார்கள். ஒன்றும் சரிப்படவில்லை. மைலாப்பூரில் ஒரு பங்களா இருக்கிறது. கரையோரம், பலே சொகுசான இடம், இருந்தாலும் அந்த இடத்தில் இருக்க வேண்டும். ஓயாமல் கடல்காற்று. ஒருபக்கம் புஷ்பத் தோட்டம், இன்னொரு பக்கத்தில் வாழை, பாக்கு, தென்னை, மா, மாதுளை, எலுமிச்சை, பலா, கமலா முதலிய மரங்களின் பழங்கள் குலுங்குகின்றன. அவற்றில் கிளிகள் கொஞ்சுகின்றன. ஒரு பக்கத்தில் தடாகம்; மரங்களிலெல்லாம் ஊஞ்சல்; உட்கார எங்கு பார்த்தாலும் சலவைக்கல் மேடைகள்; எங்கும் மணல் தரை; பெருத்த பங்களா; அதன் மணல் கரையைக் காணும்போது வயதான கிழவர்களுக்குக்கூட அதில் ஒடி விளையாடவேண்டு மென்னும் ஆசை உண்டாகும். குருடன் கூட இருபதினாயிரம் கொடுத்து விடுவான். தோதாக வந்திருக்கிறது. நம்முடைய நைனா முகம்மது இருக்கிறா னல்லவா; அவன் சிற்றப்பனுடைய பங்களா இது. அவன் நாகைப்பட்டினத்தில் கப்பல் வியாபாரி; இது அவனுக்கு இலட்சியமே இல்லை. இதை வந்த விலைக்கு விற்று விடும்படி எழுதியிருக்கிறான். சுலபத்தில் தட்டிவிடலாம். இது கிடைத்துவிடுமானால் நல்ல அதிர்ஷ்டந்தான்.

கோமளம்:- முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்ட மாதிரிதான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/197&oldid=1250717" இலிருந்து மீள்விக்கப்பட்டது