பக்கம்:மேனகா 1.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

200

மேனகா

துரிதமான அழிவைத் தேடுவாரோ! சீர்த் திருத்தங்கள் செய்ய முயலும் மேதாவிகளே முதலில் நமது பெண்டீரின் தேக பரிசுத்தத்தையும், நடத்தையையும், அழகையும் பாதுகாத்து, அவர்களை வெளியில் விடாமல் மானத்தைக் காப்பாற்றித் கொள்ளுங்கள்; நீங்கள் கெட்டுப்போய் விட்டீர்களென்று நினைத்து உலகத்தையும் கெடுக்க முயலாதீர்கள்!” என்று வராகசாமி பெருத்த ஜனாசாரச்சீர்திருத்த விஷயத்தைப் பற்றி தன் மனதிற்குள் நீண்ட தொரு உபந்நியாசம் செய்து கொண்டு நாலைந்து நிமிஷ நேரங் கழித்து கண்ணைத் திறந்து பார்த்தான். பள்ளிக்கூடச் சிறுமியர் யாவரும், அவன் சொல்வது நல்ல நீதி யென்று கருதி அதற்கிணங்கி வீடுசென்றவரைப் போல மாயமாய் மறைந்து தத்தம் வீட்டிற்குள் நுழைந்துவிட்டனர். வராகசாமி நல்ல மூச்சாக விடுத்துக்கொண்டு அந்தத் தெருவை விட்டு விரைந்து சென்று இன்னொரு தெருவை அடைந்தான்.

அங்கு சிறிது தூரம் செல்லுமுன் அவ்விடத்தில் பாண்டு (Band) வாத்தியத்துடன் ஒரு அலங்காரம் தோன்றியது. நல்ல வேளையாக அது பெண்ணலங்காரமல்ல. பலநிறங்களைக் கொண்ட காகிதங்களாற் செய்யப்பட்ட தோரணங்கள் மாலைகள் முதலியவற்றைப் பெற்ற ஒரு குதிரை வண்டி வந்தது. அதற்குள் பாண்டு வாத்தியம் வாசிக்கப்பட்டது. அதிலிருந்த ஒருவன் ஏதோ ஒரு துண்டு விளம்பரக் காகிதங்களைக் கொடுத்துக்கொண்டே இருந்தான். வண்டி சென்ற வண்ணம் இருந்தது. அதன் பின் புறத்தில், விளம்பரத்திற்காக இருபது முப்பது சிறுவர் சிறுமியர் மோதியடித்துக் கொண்டு வண்டியுடன் ஓடினர். இருபக்கங்களிலும் வீட்டின் திண்ணைகளில் இருந்த பெண்டீர் சிறுவர்களை அனுப்பி விளம்பரக் காகிதங்கள் வாங்கி வரும்படி செய்ததை வராகசாமி கவனித்தான். வண்டிக் கூண்டின் இரு புறங்களிலும் இரண்டு பெருத்த மூங்கில் தட்டிகள் இருந்தன. அவற்றில் காகிதம் ஒட்டப்பட்டு, நாடகத்திரைகளைப் போல சித்திரங்கள் எழுதப்பட்டிருந்தன. அவை எவ்விதமான சித்திரம் என்பதை வராகசாமி கவனித்தான். அதில் ஒரு புருஷன் நாற்காலியில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/218&oldid=1250846" இலிருந்து மீள்விக்கப்பட்டது