பக்கம்:மேனகா 1.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாலுக்குங் காவல் பூனைக்குந் தோழன்

219


தாந்தோனிராயர் என்ன செய்வார்? அவர் எவ்விதம் பேசினாலும் சாம்பசிவம் அதற்குமேல் ஏதாயினும் சொல்லி வளைத்துக்கொள்கிறார். அவரிடம் எதிர்த்துப் பேசுவதற்கும் அது சமயமல்ல. தான் கருதிவந்த காரியம் நிறை வேறவேண்டும். ஆகையால் ராயர் முடிவான காரியத்தைத்துவக்கினார். “எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. அது தாங்கள் மனதிற்குப் பிடிக்குமோ என்னவோ?” என்றார். சாம்பசிவம், “என்ன யோசனை?” என்றார். தாந்தோனிராயர், “வேறொன்றுமில்லை; துரைமுதலில் ஆத்திரத்தில் எத்தனையோ விஷயங்களில் செய்த உத்தரவுகளை பிறகு நிதானமான யோசனை செய்து மாற்றியிருக்கிறார். விஷயம் உண்மையில் அவசரமானதென்றும், தாங்கள் இன்று அவசியம் பட்டணத்துக்குப் போக வேண்டுமென்றும், தயவுசெய்து மறுபடி ஆலோசனை செய்து ரஜாக் கொடுக்கவேண்டு மென்றும் ஒரு கடிதம் எழுதி என்னிடம் கொடுங்கள். நான் நேரில்போய் உண்மையான விஷயங்களைத் தெரிவித்து, நீங்கள் மிகுந்த மனோ சஞ்சலத்தினால் இன்று காலையில் வரவில்லை யென்று கூறி, அவரிடம் ரஜாப் பெற்றுக்கொண்டு வருகிறேன். என்னை அவர் இன்று மாலை நான்கு மணிக்கு வரச்சொல்லியிருக்கிறார். நான் அப்போது இந்தக் காரியத்தை முடிக்கிறேன். நான் கேட்டுக்கொண்ட எந்த வேண்டுகோளையும் துரை இதுவரையில் மறுத்ததில்லை. நிச்சயமாக ரஜாக் கிடைக்கும். நீங்கள் ஊருக்குப் போகச் சித்தமாக இருங்கள்” என்றார்.

அதைக்கேட்ட சாம்பசிவம் கீழே குனிந்து யோசனை செய்தார். தமக்குக் கீழ் உத்தியோகஸ்தரான தாசில்தார் மூலமாகக் கடிதம் எழுதிக் கொடுத்து அவ்விதம் சிபார்சு செய்யச் சொல்வது அவருக்கு இழிவாகத் தோன்றியது. தவிர, அந்த உதவியை தாசில்தார் பெரிதாக மதித்துக்கொள்வார். உத்தியோக முறையில் மேலதிகாரியான தாம், பிறகு அவரை எவ்விஷயத்திலும் கண்டித்தல் முடியாமற் போகுமென்றும், அதனால் தாம் தமது கடமையிற் பிழைசெய்ய நேருமென்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/237&oldid=1250914" இலிருந்து மீள்விக்கப்பட்டது