பக்கம்:மேனகா 1.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

226

மேனகா


தாசில்:- வரகுசாமி யல்ல. அது வராகசாமி. அவன் டிப்டி கலெக்டருடைய பெண்ணின் புருஷர்; அவனுக்குப் பட்டணத்தில் வக்கீல் உத்தியோகம்.

துரை:- அவர் இல்லாதபோது இவர் போய் பெண்ணை அழைத்து வந்த காரணமென்ன?

தாசில்:- அதுதான் எனக்கும் விளங்கவில்லை. அதிலே தான் ஏதோ சூதிருக்கிறது. அதை பின்னால் யோசிப்போம். நேற்றைக்கு முன் தினம் இவருக்கு தாங்கள் ரஜாக் கொடுத்தீர்களோ?

துரை:- இல்லையே! ஒரு வாரத்திற்கு முன், தம்முடைய பெண்ணைப் புருஷன் வீட்டில் கொண்டுபோய் விடவேண்டு மென்று ரஜா கேட்டார். கொடுத்தேன். அது நன்றாக நினைவிருக்கிறது. இந்த நாலைந்து நாளாக அவர் ரஜாவே வாங்க வில்லையே! - ஆம் இன்று அவருடைய சுற்றுப் பிரயாணச் செலவின் பட்டியை (Travelling Allowance Bill) அனுப்பியிருக்கிறார். அது என் பெட்டியிலிருக்கிறது; அதைப் பார்க்கிறேன். (பெட்டியைத் திறந்து பார்க்கிறார்) ஐந்து நாட்களாக அம்பாசமுத்திரம் முதலிய ஊர்களிலல்லவோ சுற்றுப்பிரயாணம் செய்ததாக எழுதி ரூ.35 பெற்றுக் கொண்டிருக்கிறார்.

தாசில்:- (புன்னகை செய்து) பார்த்தீர்களா முழுப் புரட்டை? முந்திய நாள் இவர் பட்டணத்தில் இருக்கிறார். இங்கே கிராமங்களில் சர்க்கார்வேலை செய்ததாக எழுதி பணம் வாங்கியிருக்கிறார்.

துரை:- (அடக்கிய கோபத்தோடு) இன்று காலையில் நீர் போன போது, அவர் இதைப்பற்றி என்ன சமாதானம் சொன்னார்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/244&oldid=1250922" இலிருந்து மீள்விக்கப்பட்டது