பக்கம்:மேனகா 1.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

260

மேனகா

என்றாலும் ஏதாயினும் ஒன்றைச் சொல்லவேண்டு மென்று நினைத்து, “போட்மெயிலில் தானே வந்தீர்கள்?’ என்றார்.

அதைக் கேட்ட சாம்பசிவம், “ஆம்; வேறு வண்டியேது? எங்கே மாப்பிள்ளையைக் காணோமே ? பெரிய வக்கீல் வீட்டுக்குப் போயிருக்கிறாரோ?” என்றார்.

உடனே சாமாவையர் பெரிதும் விசனத்தோடு சிரத்தைக் கீழே கவிழ்த்தார்; இரண்டொரு நிமிஷ நேரம் மெளன மாயிருந்தார். பிறகு, “அதை ஏன் கேட்கிறீர்கள்! பட்டகாலிலே படும்; கெட்ட குடியே கெடும் என்பது போல எல்லா ஆபத்தும் நமக்கே வந்து சேருகிறது” என்றார். எதிர்பாராத அந்தப் பயங்கரமான சொல்லைக் கேட்க அவர்களுடைய பதை பதைப்பு ஒன்றுக்கு நூறாய்ப் பெருகியது. சாம்பசிவம் சாமாவையருடைய வாயிலிருந்து என்ன விபரீத சமாச்சாரம் வெளிப்படுமோவென்று அஞ்சினார்; அவருடைய வாயையே நோக்கி வண்ணம், “என்ன விசேஷம்?” என்று ஆவலோடு கேட்க, சாமாவையர், “நேற்று காலையில் சேலத்திலிருந்து வராகசாமி திரும்பி வந்தான். வந்தவுடன், மேனகா காணாமற் போனதைப் பற்றிக் கேள்விப் பட்டு, நிரம்பவும் விசனமடைந்தான்; ஜலபானம்கூடச் செய்யாமல் பைத்தியம் பிடித்தவனைப்போல பிதற்றிக்கொண்டிருந்தான். சாயுங்காலம் எழுந்து ஒருவருக்குந் தெரியாமல் கடற்கரைக்குப் போய்விட்டான் போலிருக்கிறது. அதற்கப்புறம் தற்செயலாக நான் இங்கே வந்தேன். வராகசாமி எங்கே என்றேன். ஹோட்டலில் காப்பி சாப்பிடப்போவதாகச் சொல்லிவிட்டுப் போனான் என்று இவர்கள் சொன்னார்கள். நான் உடனே அவனைத் தேடிக்கொண்டு தெருத்தெருவாய் அலைந்தேன். அவன் எங்கும் அகப்படவில்லை; கடைசியாக கடற்கரைக்குப் போனேன். அங்கே அப்போது ஒருவன் மேல் மோட்டார் வண்டி ஏறிவிட்டதைக் கண்டு ஜனங்கள் ஓடினார்கள்; நானும் ஒடிப்போய் பார்க்கிறேன்! வராகசாமி கீழே கிடக்கிறான்!” என்று பெரிதும் வியப்போடு கூறினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/278&oldid=1251360" இலிருந்து மீள்விக்கப்பட்டது