பக்கம்:மேனகா 1.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

272

மேனகா


உடனே சாயிபு ஒன்றையும் அறியாதவனைப்போல, “இல்லே ஸாமி! எங்க ஊடு இங்கே இருக்கிறான்; அதுக்காகவ குதிரே எடக்குப் பன்றாங்கோ; இதோ ஆச்சு ஒட்டறேன் ஸாமி!, ரோசனை பண்ண வாணாம் ஸாமி!” என்று கூறிக் குதித்து, குதிரையின் கடிவாள வாரைப் பிடித்து நடத்துபவன் போலச் செய்து, வண்டியை ஸ்டேஷன் வாசலின் ஒரமாக நிறுத்தினான். உடனே புற்றிலிருந்த ஈசல்கள் கிளம்புதலைப்போல, ஐந்தாறு போலீஸ் ஜெவான்கள் தோன்றி, வண்டியின் நாற்புறங்களிலும் சூழ்ந்துகொண்டனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் பின்பக்கத்தில் திடீரென்று தோன்றி பனைமரத்தைப் போன்று விறைத்து நின்று சாம்பசிவத்திற்கு திருஷ்டி தோஷம் கழிப்பவரைப்போல வலது கையை தூக்கிக்காட்டி ஒழுங்காக சலாம் செய்து தமது கையைத் துடையில் சேர்த்து நின்றார். எதிர்பாராத அந்தக்காட்சியைக் கண்டு திடுக்கிட்ட சாம்பசிவத்தின் நிலைமை எப்படி இருந்தது என்றால், பாசி நிறைந்த குளத்தில் ஒரு கல்லைப்போட்டவுடன் பாசி விலகி நாற்புறங்களிலும் அலை நகர்ந்து, இடையில் தெளிவான இடத்தைக் காட்டுதலைப்போல, அவருடைய ஏனைய துன்பங்களும், உணர்ச்சிகளும் திடுக்கென்று அவருடைய மனத்தின் முன்புறத்திலிருந்து பின் புறத்துக்கு ஒதுங்கின; அவர் சுய உணர்வைப் பெற்று தமது இயற்கையான கெளரவத் தோற்றத்தைக் கொண்டு, தமது முகத்தில் சந்தேகம் தோன்ற, “யார் நீங்கள்? இந்த டிவிஷன் போலீஸ் இன்ஸ்பெக்டரோ? இதற்கு முன் என்னைப் பார்த்திருக்கிறீர்களோ?” என்றார்.

சமய சஞ்சீவி அய்யர் தம்முடைய முகத்தைத் தாமரைப் பூவைப் போலப் புன்னகையால் மலர்த்திக் காட்டி, “ஆம்; தாங்கள் தஞ்சாவூர் டிப்டி கலெக்டர்வாள் அல்லவா?” என்றார்.

சாம்ப:- ஆம்; நான்தான்- என்றார்.

போலீஸ்:- அப்படியானால் தாங்கள் ஒரு நிமிஷ நேரம் ஸ்டேஷனுக்குள் தயவு செய்யவேண்டும் - என்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/290&oldid=1251378" இலிருந்து மீள்விக்கப்பட்டது