பக்கம்:மேனகா 1.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திரிசங்கு சொர்க்கம்

275

அவருக்கு மிகுந்த ஆவலைக் கொடுத்தது. சாம்பசிவம் மெதுவாக, “தாங்களை நான் பார்த்ததில்லை; போலீஸ் கமிஷ்னர் தாங்கள்?”

துரை, “ஆம்; நான்தான்; சங்கதி வேறொன்றுமில்லை. நேற்றிரவு எனக்குத் தஞ்சாவூர் கலெக்டர் துரையிடமிருந்து ஒரு அவசரத்தந்தி வந்தது. அதை உங்களுக்குத் தெரிவிக்க விரும்பியே உங்களைத் தருவித்தேன்” என்றார்.

திடுக்கிட்டுப் பெரிதும் வியப்படைந்த சாம்பசிவம், “நேற்று சாயுங்காலம்தானே நான் அங்கிருந்து புறப்பட்டு வந்தேன். இதற்குள் என்ன அவரசமான சம்பவம் நேர்ந்துவிட்டது?” என்றார்.

துரை, “இதோ படிக்கிறேன்; கேளுங்கள். இதில் முதல் பாதிபாகம் உங்களுக்கு சம்பந்தமானது, பிற்பாதி பாகம் எங்களுக்குச் சம்பந்தமானது. ஆகையால், உங்களுக்குச் சம்பந்தப்பட்ட முதல் பாகத்தைப் படிக்கிறேன் கேளுங்கள்:

சென்னை போலீஸ் கமிஷனர் அவர்களுக்கு :- தஞ்சாவூர் டிப்டி கலெக்டர் சாம்பசிவையங்கார் இன்று மாலையில் இங்கிருந்து புறப்பட்டு பட்டணம் வருகிறார். காலையில் எழும்பூரில் இறங்குவார். பிறகு திருவல்லிக்கேணி தொளசிங்கப் பெருமாள் கோவில் தெருவிலிருக்கும் வக்கீல் வராகசாமி அய்யங்கார் அவர்களது வீட்டிற்கு வருவார். அவரைக் கண்டு அவரிடம் அடியில் எழுதப்பட்ட எனது உத்தரவைக் கொடுத்து, அதற்கு சாட்சியாக நீங்களே அவருடைய கையெழுத்தையும், பெருவிரல் ரேகை அடையாளத்தையும் பெற்றுக் கொள்ளக் கோருகிறேன். அவர் ரஜா இல்லாமல் இரண்டு தடவைகளில் தம்முடைய அதிகார எல்லையை விடுத்து வெளியூர்களுக்குப் போயிருக்கிறார். அப்படிப் போன ஒரு சமயத்தில், தாம் தம்முடைய உத்தியோக முறையில் தம்முடைய அதிகார எல்லைக்குள்ளிருக்கும் கிராமங்களில் முகாம் செய்ததாக பொய்யான செலவுப் பட்டி தயாரித்து,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/293&oldid=1251381" இலிருந்து மீள்விக்கப்பட்டது