பக்கம்:மேனகா 1.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

304

மேனகா

அவைகள் உட்புறத்தின் தன்மையை மாத்திரம் நன்றாக வெளியில் தோற்றுவித்தன. மூளையின் குழப்பமும், உணர்வின்மையும் நிதரிசனமாக விளங்கின. அவ்வாறு பிளவுபட்ட இமைகள் இரண்டொரு நிமிஷ நேரத்தில் சோர்வடைந்து சேர்ந்துகொண்டன. அவள் திரும்பவும் சவம் போலானாள். மிக்க பயங்கரமாக இருண்ட இரவுகளில் எப்போது இரவு தொலையுமென்றும் எப்போது பொழுது புலருமென்றும் மனிதர் வருந்துகையில் நெடுநேரத்திற்கு முன்னரே கோழி கூவி பொழுது விடியுமென்னும் நம்பிக்கை உண்டாக்குதலைப்போல மேனகாவை நாகபாசமெனக் கட்டி அழுத்தியிருந்த இருள் விலகுமென்பதை அவளது இமைகள் முன்னால் அறிவித்தன. அதனால், அவளது உடம்பு மாத்திரம் இன்னமும் அசைவற்றே கிடந்தது; காணாமற்போன மனிதரைத் தேடியழைத்து வர வேவுகாரரை அனுப்புதலைப் போல, மறந்துபோன அவளது உணர்வைத் தேடிக்கொண்டு வரும் பொருட்டு அன்றிரவு முதல் காலை வரையில் உள்ளே செலுத்தப்பட்ட மருந்துகள் தமது அலுவலை மிகவும் திறமையோடு செய்து, எமனுலகம் வரையிற் சென்று முஷ்டி யுத்தம் செய்து, அதைத் திரும்பிக் கொணர்ந்து, அவளுடைய உடம்பை இறுக அழுத்திக் கொண்டிருந்த இரும்புக் கதவுபோன்ற உணர்வின்மையை உடைத்து அதில் ஒரு சிறிய துளை செய்து, உட்புறத்தில் உயிரைப் பெய்தன. அவளது உயிராகிய விளக்கு நன்றாய்ப் பிடித்துக்கொண்டு சுடர்விட்டு எரிய ஆயத்தமாய் புகைய ஆரம்பித்தது. அவளது மனதில் உடனே ஒரு சிறிது உணர்ச்சி உதயமானது. அவ்வுணர்ச்சியில் ஒரே குழப்பமும் உடம்பு முற்றிலும் ஒரே இரணகாயமா யிருப்பதும் தெரிந்தனவன்றி, தான் யாவரென்பதும், தானிருந்த இடம் எதுவென்பதும், தனக்கு நேர்ந்த துன்பங்கள் இன்னின்ன வென்பதும் மனதிற் புலனாகவில்லை. இன்னமும் தேகமும் மனதும் சலனப்பட்டு இயங்காமல் ஜடத்தன்மையான நிலைமையில் இருந்தன. மேலும், கால் நாழிகையில் புகையின் நடுவில் மெல்லிய சுடர் எழுதலைப்போல அவளது உயிரும் உணர்வும் சிறுகச்சிறுக வலுவடைந்து பெருகின. தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/322&oldid=1251430" இலிருந்து மீள்விக்கப்பட்டது