பக்கம்:மேனகா 1.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வலையிற்பட்ட மடவன்னம்

63

எப்போதும் தன்னை அன்பாகவே நடத்து வாரென்றும், தன்னைப்போன்ற பாக்கியவதிகள் எவரும் இருக்க மாட்டார்களென்றும் நினைத்தாள். அடுத்த நொடியில் பாம்பு கடித்து மரிக்கப்போகும் ஒரு மனிதன் நிலம் வாங்கவும், மெத்தை வீடு கட்டவும், இன்னொரு மனைவியை மணக்கவும் நினைப்பவைபோல மேனகா தனது காலடியிற் கிடந்த வஞ்சகப் பாம்பைப் பற்றிச் சிறிதும் சந்தேகிக்காமல் மனக்கோட்டை கட்டி மகிழ்ச்சி கொண்டிருந்தாள். அந்தத் தெருவில் நெடுந்துரம் வந்து விட்டதைப் பற்றி திரும்பவும் ஐயமுற்ற மேனகா, “என்ன இது? நாம் இப்போது எங்கிருக்கிறோம்? வி.பி. ஹால் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது?” என்றாள்.

பெரு:- இதோ வந்துவிட்டது. நாம் குறுக்கு வழியாக வந்திருந்தால் இவ்வளவு நாழிகையில் போயிருக்கலாம், கடற்கரை வழியாக மெல்ல வந்தமையால் தூரம் போல இருக்கிறது- என்றாள்.

இரண்டொரு நிமிஷத்தில் வண்டி ஒரு பெருத்த மாளிகையின் வாசலில் வந்து நின்றது. தெருவில் ஆங்காங்கு மின்சார விளக்குகள் நட்சத்திர மணிகள் போலச் சுடர்விட்டு எரிந்துகொண்டிருந்தன. அந்த மாளிகையின் வாசலில் இரண்டு விளக்குகள் இருந்தன. வண்டி நின்றவுடன் மேனகா, “இது வி.பி.ஹாலை போல இல்லையே” என்றாள்.

பெருந்தேவி, “சாமா! வண்டியை முன்பக்கத்துக்குக் கொண்டுபோகாமல் பின் பக்கத்தில் ஏன் நிறுத்தினாய்?” என்றாள்.

சாமா:- வராகசாமி இவ்விடத்தில் நமக்காக காத்திருப்பதாயும், பின்பக்கமாக உள்ளே போனால் முன்னே நல்ல இடத்தில் உட்காரலாமென்றும் சொன்னான். அவன் இங்கே எதிரில் இருப்பான், இறங்குங்கள்- என்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/81&oldid=1249157" இலிருந்து மீள்விக்கப்பட்டது