பக்கம்:மேனகா 2.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114

மேனகா

வைத்தார். கனகம்மாளுக்கு அந்தக் கிழவரது குணம் நன்றாகத் தெரியும்; அந்த ஆபத்துக் காலத்தில் பணச்செலவாகுமென்று கருதியே அவர் வரவில்லையென்று கனகம்மாள் யூகித்துக் கொண்டாள்; எனினும் அவள் தனது மனதை வெளியிட வில்லை. ஏனெனில், அவரிடமிருந்து ஒருகால் தெய்வச் செயலாகப் பணம் கிடைத்துவிடுமானால், தங்கம்மாளது காரியத்தைத் தாமதமின்றி நடத்தலாமென்று நினைத்தே மெளனம் சாதித்தாள். அவர்களிருவரும் தனது பிரரேபணையை ஆமோதிப்பதாக நினைத்த கிட்டன், தான் போய் விட்டு வருவதாகக் கூறிவிட்டு வெளியிற் சென்று ஒரு குதிரை வண்டியை அமர்த்திக் கொண்டு வேகமாய் போய்விட்டான். உடனே ரெங்கராஜு, “பெரியம்மா! எஜமான் ரொம்பவும் களைப்பா யிருக்கிறாங்க; இங்கே நாம்ப சும்மாத்தானே இருக்கப்போறோம்; ஊட்டுக்குப் போயி பூசையை முடிச்சுக்கிட்டு வந்துடலாமே; எஜமான் பசி தாங்க மாட்டாங்கம்மா” என்று உருக்கமாக மிருதுவாய்க் கூறினான். அதைக் கேட்ட கனகம்மாளின் மனதிலும் இனி சாம்பசிவத்தைப் பட்டினியா யிருக்க விடுவது தவறென்பது தோன்றியது: “சரி; நாம் அகத்துக்குப் போய்விட்டு வந்து விடுவோம்; குதிரை வண்டி கொண்டுவா!” என்றாள். அடுத்த நிமிஷம் வண்டி வந்து நின்றது; மூவரும் அதில் ஏறிக்கொண்டு வீட்டை அடைந்தனர்.

உடனே வேலைக்காரி புரோகிதர் முதலியோர் வரவழைக்கப் பட்டனர்; வேலைக்காரி வீட்டை மெழுகிச்சுத்தி செய்தாள்; புரோகிதர் புண்ணியாகவாசனம் செய்தார்; அதற்குள் சாம்பசிவத்தினிடம் ரூபா பத்தை பெற்றுக்கொண்டு போன ரெங்கராஜ தேவையான பாத்திரங்கள், சாமான்கள் முதலியவற்றைக் கொணர்ந்து நிரப்பினான். இருவரும் ஸ்நானம் செய்து கொண்டனர். கால்நாழிகையில் சமையல் சாப்பாடு முதலியவை முடிந்தன; இருவரும் சிறிது நேரம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/115&oldid=1251995" இலிருந்து மீள்விக்கப்பட்டது