பக்கம்:மேனகா 2.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முற்றும் நனைந்தவர்க்கு ஈரமுண்டோ?

127

பட்டை யடைந்தது. போர்ட்டர் தலையில் கையை வைத்துக் கொண்டு, “செங்கல்பட்டு, செங்கல்பட்டு” என்று தூக்கத்தில் அழுதுகொண்டு வந்ததைக் கேட்டு தமது உணர்வைப் பெற்ற சாம்பசிவம், “சரி; நான் போய்விட்டு வருகிறேன். இன்று சாயுங்காலத்துக்குள் தவறாமல் பட்டணம் வந்து சேருகிறேன். கட்டாயமாக வந்து விடுகிறேன். ஜாக்கிரதையாகக் கொண்டுபோய் சேருங்கள். சர். சவலை இராமசாமி முதலியார் சத்திரத்தில் ஒரு அறையை வாடகைக்குப் பேசி அதில் ஜாகை செய்துகொள்ளுங்கள். பணம் அடுத்த இரயிலில் வருவதாக டாக்டரிடம் சொல்லி, காரியத்தை முடிக்கும்படி செய்; இந்தப் பணத்தையெல்லாம் நீ கொண்டுபோ; எனக்கு ரூபா இரண்டு போதும்; ஜாக்கிரதை ஜாக்கிரதை” என்று சொல்லி இரண்டு ரூபாயை எடுத்துக்கொண்டு மிகுதிப்பணத்தை தாயினிடம் கொடுத்து விட்டு வண்டியிலிருந்து கிழே இறங்கினார். கனகம்மாள் அவருக்கு ஆயிரம் முறை, "ஜாக்கிரதை” சொல்லி அனுப்பினாள். கீழே இறங்கிய சாம்பசிவம் அடுத்த வண்டிக்குச் சென்று கிட்டனுக்கும் ரெங்கராஜுவுக்கும் சொல்ல வேண்டியதைச் சொல்லிக் கொண்டிருக்கையில் வண்டி சென்னையை நோக்கி நகர்ந்தது. வண்டியிலிருந்த தமது மனைவியின் வடிவத்திலேயே தமது முழுமனதையும் செலுத்தி யிருந்த சாம்பசிவம் யாவற்றையும் மறந்து பைத்தியக்காரனைப் போல ரயில் போன திக்கைப் பார்த்துக்கொண்டே நெடுநேரம் நின்றார்.

தங்கம்மாளை எடுத்துச் சென்ற வண்டியோ காலை ஏழரை மணிக்குச் சென்னை எழும்பூர் வந்து சேர்ந்தது. உடனே, ரெங்கராஜு, சில கூலியாட்களை அமர்த்தி அவர்களது உதவியால் தங்கம்மாளைத் தொட்டிலோடு கீழே இறக்க, தொட்டில் பிளாட்பாரத்தில் மறைவான ஒரிடத்தில் வைக்கப்பட்டது. கூலிக்கு மோட்டார் வண்டி யொன்றை அமர்த்தும்படி ரெங்கராஜு அங்கு மிங்கும் தலைதெறிக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/128&oldid=1252010" இலிருந்து மீள்விக்கப்பட்டது