பக்கம்:மேனகா 2.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130

மேனகா

அவரை விட்டால், வேறுகதியில்லாமல் இருந்தது. அத்தகைய மனிதரான வில்லியம்ஸ் துரை வீட்டின் வாசலில் மோட்டார் வண்டி வந்து நின்றது. உடனே கிட்டனும், ரெங்கராஜுவும் வண்டியினின்று இறங்கி உட்புறம் நுழைந்து, கடிதத்தை துரையினிடம் நீட்டினார். துரை மூக்குக் கண்ணாடி பளபளவென்று மின்னிய தமது பறங்கிப்பழ முகத்தால் அவர்களை ஏற இறங்கப் பார்த்தார். பிறகு கடிதத்தை வாங்கி அதை அலட்சியமாகத் திறந்து படித்தார். ஆனால் அவரது முகத்தில் எவ்வித மாறுபாடேனும், இரக்கமேனும் துடிப்பேனும், கவலையேனும் காணப்படவில்லை. கடிதத்தை அருகிலிருந்த மேஜையின் மீது அலட்சியமாக எறிந்தார். வேறுதிசையில் தமது முகத்தைத் திருப்பிக்கொண்டு, “அடே நடேசா! வண்டி தயாராக இருக்கிறதா ?” என்றார். அவரது வேலையாளான நடேசன், “தயாரா யிருக்கிறது; புறப் படலாம்” என்றான். உண்மையில், அவர் அப்போது ஒரு அவசர காரியத்தின் பொருட்டு வெளியே போக ஆயத்தமாக இருந்தார். அந்தச் சமயத்தில் நம்மவர்கள் வந்து தோன்றியது, அவருக்கு மிகுந்த ஆத்திரத்தை உண்டாக்கியது. என்றாலும் தஞ்சையிலிருந்து வந்த கடிதத்தை மதித்து தமது கோபத்தை ஒரு சிறிது அடக்கிக் கொண்டு கிட்டனை நோக்கி, “அந்த அம்மாள் எங்கே இருக்கிறாள்?” என்று கேட்டார்; வாசலில் மோட்டாரில் இருப்பதாக அவன் கூற, உடனே அழைத்து வரும்படி துரை உத்தரவளித்தார். அடுத்த நிமிஷம், தங்கம்மாளிருந்த தொட்டிலை கிட்டன், ரெங்கராஜா, கனகம்மாள், மோட்டார் வண்டிக்காரன் ஆகிய நால்வரும் தூக்கிக்கொண்டு வந்து உட்புறத்தில் வைத்தனர். உடனே துரை அவர்கள் நால்வரையும் வெளியில் இருக்கச்செய்து கதவை மூடித் தாளிட்டுக்கொண்டு கால் நாழிகை நேரம் தங்கம்மாளின் உடம்பைச் சோதனை செய்து பார்த்தார்; தமது சிப்பந்தியை அழைத்து, காயங்களை அலம்பிச் சுத்தி செய்து மருந்துகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/131&oldid=1252013" இலிருந்து மீள்விக்கப்பட்டது