பக்கம்:மேனகா 2.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முற்றும் நனைந்தவர்க்கு ஈரமுண்டோ?

137

திகைப்படைந்தவனாய், “நான் பட்டணத்திலிருந்துதானே வருகிறேன். அவர் அங்கே வரவில்லையே! இங்கே யிருந்து எத்தனை மணிக்குப் புறப்பட்டார்?' என்றான். “அவர் சாயுங்காலம் ஐந்து மணிக்கு குதிரை வண்டி வைத்துக்கொண்டு போய்விட்டார்; பட்டணத்துக்குப் போவதாகச் சொன்னார்; எங்கே போனாரோ எனக்குத் தெரியாது” என்றார் செட்டியார். ரெங்கராஜுவின் மனதில் இன்னதென்று விவரிக்கக் கூடாத பல சந்தேகங்களும், திகிலும், கவலையும் குடிகொண்டன. சாம்பசிவம் எங்கு சென்றாரோ, அவருக்கு என்ன ஆபத்து நேர்ந்ததோ, குதிரை வண்டியில் போகும்போது வழிப்பறி ஏதேனும் நடந்திருக்குமோ வென்று பலவாறு நினைத்து வந்த வண்டியிலேயே ஏறிக்கொண்டு செங்கற்பட்டை நோக்கித் திரும்பினான்.

கனகம்மாள் முதலியோருடன் வந்து முந்திய நாள் விடியற் காலையில் செங்கற்பட்டில் இறங்கிய சாம்பசிவம் எங்கு சென்றார், என்ன செய்தார் என்பனவற்றைக் கவனிப்போம். தங்கம்மாளை எடுத்துச் சென்ற வண்டி மறைந்து போன பின்னரும் நெடுநேரம் வரை ஒரே நிலையில் நின்றிருந்த சாம்பசிவத்தின் மனதில், தாம் சீக்கிரம் போய் பணம் வாங்கி வாராவிடில், தமது மனைவியின் ஆபரேஷன் ஒழுங்காக நடைபெறா தென்னும் நினைவு தோன்றியது. அவர் விரைவில் தமது ஊருக்குப் போய் பணத்தை வாங்கி வர வேண்டுமென்னும் ஆவல் கொண்டவராய் ஸ்டேஷனைவிட்டு வெளியில் வந்து, குதிரை வண்டியில் ஏறிக்கொண்டு பதினைந்து மையிலுக்கப்பாலிருந்த பகற் கொள்ளைப்பாக்கம் என்னும் சிற்றுரை அடைந்தார். அவ்வூரில் பணம் கொடுக்கல் வாங்கல் செய்து வந்த நீலகண்டம் செட்டியாரிடம் சென்று தமது வரலாறுகளைச் சுருங்கக் கூறி, தமக்கு ரூபாய் ஆயிரம் அப்போதே வேண்டுமென்றும், ரூபா மூவாயிரம் பெறத்தக்க தமது வீட்டை அடமானம் வைப்பதாகவும் தெரிவித்தார். அந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/138&oldid=1252020" இலிருந்து மீள்விக்கப்பட்டது