பக்கம்:மேனகா 2.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

174

மேனகா

இரவில், வீட்டின் கதவைத் திறந்தவன் அவனே தான் என்ன செய்வது என்பதைப்பற்றி நைனா முகம்மது அந்த வேலைக்காரனிடம் நெடுநேரம் யோசனை செய்தான். கடைசியில் அவர்களிருவரும் ஒருவகையான முடிவிற்கு வந்தனர். அடுத்த தெருவிலிருந்து சையது இமாமின் வீட்டில் நைனா முகம்மது சில நாட்களுக்கு ஒளிந்துகொண்டிருப்ப தென்றும், ஆனால் அவன் வியாபார நிமித்தம் நாகைப் பட்டணத்திற்குப் போயிருப்பதாக சையது இமாம் சொல்லிக்கொண்டிருக்க வேண்டுமென்றும் தீர்மானித்து அப்படியே செய்தனர். ஒரு வாரமாக நைனா முகம்மது அந்த இடத்தில் ஒளிந்துகொண்டிருந்தான். ஆனால், அவன் நாகைப்பட்டணம் போயிருப்பதாக வேலைக்காரன், குமாஸ்தாக்களிடத்திற்கூடப் பொய் சொல்லிக் கொண்டிருந்தான். ஒரு வாரம் சென்றதும் தனது மனவிை தனது வீட்டிற்கு வரவில்லை என்பதை நைனா முகம்மது உணர்ந்தான். மைலாப்பூர் பங்களாவில் அவர்களின் கருத்து எப்படி இருந்த தென்பதை அறிந்துகொண்டு வர சையது இமாம் எவ்வளவோ பாடுபட்டானாயினும், அது பலிக்காமல் போனது. ஆகையால், இன்னம் எத்தனை நாட்களுக்கு அப்படி மறைந்து கொண்டிருக்க வேண்டுமோ வென்று நைனா முகம்மது நினைத்துத் தவித்து, சிறைச் சாலையில் வசிப்பவனைப்போல வதைப்பட்டுக்கொண்டிருந்தான். சையது இமாம் நைனா முகம்மதுவின் சாப்பாடு வசதிகளுக்கென்று ஒவ்வொரு நாளும் ஏராளமான பணத்தைப் பிடுங்கி புலால் முதலிய சிறந்த உணவுகளைத் தயாரித்துத் தின்றுவந்ததன்றி பெரும் பொருளையும் அபகரித்து வந்தான். ஆனால், நைனா முகம்மதுவைப் பயமுறுத்தி, தனது வீட்டில் அவன் இன்னும் பல நாட்களிருக்கும்படி செய்ய நினைத்து அதற்குத் தக்கபடி பல புளுகுகளைக் கூறி வந்தான்.

ஒரு நாள் அவன் நைனா முகம்மதுவுடன் மிகவும் கவலையும் அச்சமும் கொண்டு பேசிக்கொண்டிருந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/175&oldid=1252324" இலிருந்து மீள்விக்கப்பட்டது