பக்கம்:மேனகா 2.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

176

மேனகா

எஜமான் சிறைச் சாலைக்குப் போவது நிச்சயமென்று சொல்லிவிட்டு எழுந்து போனார். நான் அவரை விடாமல் தொடர்ந்து போய், அதன் விவரங்களை யெல்லாம் தெரிவிக்கும்படி கேட்டேன். இருபத்தேழில் குறைந்த ஒர் எண்ணைச் சொல்லும்படி கேட்டார்; நான் பத்து என்றேன். அவர் உடனே, “சரி அவருடைய மாமனாரே போலீசுக்கு பிராது எழுதி யனுப்பி விட்டார். இனி தப்பமுடியாது” என்று சொல்லிக் கொண்டே அவசரமாக நடந்தார். நான் அவரை விடாமல் தொடர்ந்து சென்று, இதற்கு ஏதாவது பரிகாரம் மாந்திரீகத்தின் மூலமாகச் செய்தால், எஜமானரிடம் பெருத்த வெகுமதி வாங்கித் தருவதாகச் சொல்லி வேண்டிக் கொண்டேன். அவர் தமக்கு வெகுமதி வேண்டாமென்றும், ஆனால் தாம் பரோபகாரமாக உதவி செய்வதாகவும், நாகூர் தர்காவுக்கு இரண்டு ஆயிரம் ரூபா கொடுத்துவிட வேண்டுமென்றும் சொன்னார். அப்படியே ஆகட்டு மென்றேன்; உங்களிடம் வரும்படி கேட்டுக் கொண்டேன்; இன்று காலையில் வருவதாகச் சொன்னார்; அவரும் வரும் நேரமாகிவிட்டது; உங்ளுடைய வீட்டு வாசலில் காத்திருப்பார். நான் போய் அழைத்துக் கொண்டு வருகிறேன்-என்றான்.

நைனா:- என்னவோ நல்ல காலத்துக்குத்தான் ஆண்டவன் இந்த மகானை அனுப்பியிருக்கிறான். வெயில் சுட்டதென்று நம்முடைய வீட்டில் அவர் உட்கார்ந்ததே ஆண்டவன் செய்த காரியம். நீ சீக்கிரம் போய் அவரை இங்கே அழைத்து வா! - என்றான்.

உடனே சையது இமாம் தன்னுடைய வீட்டை விட்டு வெளியிற் சென்று அங்கப்ப நாயக்கன் தெருவிலுள்ள நைனா முகம்மதுவின் வீட்டை அடைந்தான். அதன் பிறகு அரை நாழிகை நேரம் சென்றது. மந்திரவாதி பிரசன்னமானார். அவரும் முகம்மதியரே; அவருக்குச் சற்றேறக்குறைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/177&oldid=1252329" இலிருந்து மீள்விக்கப்பட்டது