பக்கம்:மேனகா 2.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

178

மேனகா

போகவேண்டாமா?” என்றார். அதைக்கேட்ட வேலைக்காரன் தன்னை மந்திரவாதி அங்கே இருக்க வேண்டாமென்று போகச் சொல்லுவதாக ஊகித்துக்கொண்டு, “ஆம்; நான் போகிறேன்” என்று சொல்லி விட்டு வெளியில் நடந்தான். பிறகு நைனா முகம்மது மந்திரவாதியை நோக்கி, “ஐயா பெரியவரே! தங்களுடைய சொந்த ஊர் எது? இந்த ஊருக்கு வந்து எத்தனை நாளாகிறது?” என்றான். மந்திரவாதி, “நானிருப்பது மலையாள தேசத்தில் திருச்சூர். இங்கே ஒரு பெரிய மனிதர் வீட்டில் ஒரு மாந்திரீக வேலை முடித்துக் கொடுக்க அழைத்து வந்தார்கள். நேற்றுதான் இந்த ஊருக்கு வந்தேன். ரயில் டிக்கெட்டு கூட என்னிடமே இருக்கிறது. டிக்கெட்டு வாங்குகிறவர்கள் என்னிடம் டிக்கெட்டுக் கேட்கவே இல்லை. இதோ பாருங்கள்” என்று தமது சட்டைப் பையிலிருந்த ஒரு டிக்கெட்டை எடுத்துக்கொடுத்தார்; அது திருச்சூரிலிருந்து (எர்ணாகுளத்திலிருந்து) சென்னைக்கு இரண்டு நாளைக்கு முன் வாங்கப்பட்ட டிக்கட்டாக விருந்தது. சமீபகாலத்தில் வந்த மனிதராகிய அவர், பல நாட்களுக்கு முன் நிகழ்ந்தவையான தன்னுடைய விஷயங்களை யறிந்து சொல்லுவதால், அவர் உண்மையில் பெருத்த மகானே என்று நைனா முகம்மது நினைத்தவனாய், அவரிடத்தில் பெருத்த மதிப்பையும் மரியாதையும் வைத்துப் பேசத் தொடங்கி, “மகானே எனக்கு வந்துள்ள ஆபத்தை இன்னதென்றறிந்து சொல்லி, அதற்குத் தகுந்த பரிகாரமும் நீங்கள் தேடிச் செய்ய வேண்டும். உங்களுடைய ஆக்கினைப்படி நாகூர் தர்காவுக்கு இரண்டாயிரம் ரூபா இப்போதே காணிக்கை செலுத்தி விடுகிறேன்” என்றான்.

உடனே மந்திரவாதி ஆடம்பரமாக உட்கார்ந்துகொண்டு தமது மூட்டையை அவிழ்த்து, அதிலிருந்த சக்கரம் எழுதப்பட்ட சில பனை ஏடுகளையும் ஒரு மந்திரக் கோலையும் எடுத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/179&oldid=1252337" இலிருந்து மீள்விக்கப்பட்டது