பக்கம்:மேனகா 2.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

256

மேனகா

கொண்டு கோமளம் உள்ளே நுழைந்தாள். அவளது இடது கையில் ஒரு தபாற் கடிதம் இருந்தது; வலதுகையில் மைக்கூடும் பேனாவும் இருந்தன. வராகசாமி அவளைப் பார்த்து, “என்ன செய்தி?” என்றான்.

கோமளம், “இந்தத் தபாற் கடிதம் உனக்கு வந்திருக்கிறது. இது ரிஜிஸ்டர் செய்யப்பட்டதாம். தபால்காரன் உன்னிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டு வரச் சொல்லுகிறான்” என்று கடிதத்தை அவனிடம் நீட்டினாள். அதைக் கேட்ட வராகசாமி, தனக்கு யாரிடத்திலிருந்து ரிஜிஸ்டர் கடிதம் வந்திருக்குமென்று யோசனை செய்து ஒரு சிறிது திகைப்படைந்தான். விபரமொன்றும் விளங்கவில்லை. அதை வாங்கி மேல் விலாசத்தைப் பார்த்தான். அது ஏதோ போலீஸ் ஸ்டேஷனிலிருந்து வந்திருப்பதாகத் தெரிந்தது. வராகசாமியின் ஆச்சரியம் கரைகடந்த தாயிற்று. அது எதைக் குறித்த கடிதம் என்பதை அறிய அவன் மிகவும் ஆவல் கொண்டான், ரசீதில் அவன் உடனே கையெழுத்திட்டு அதை கோமளத்தினிடம் கொடுத்து அவளை அனுப்பியபின் கடிதத்தின் உறையைக் கிழித்து, உட்புறத்திலிருந்த காகிதத்தை விரைவாக வெளியில் எடுத்தான்; வெள்ளைக்கார மடந்தையும் அதிகரித்த வியப்பும் திகைப்பும் அடைந்து, கடிதத்தையும் அவனது முகத்தையும் மாறிமாறிக் கவனித்துக் கொண்டு அவனுக்கருகில் பணிவாக நின்று கொண்டிருந்தாள். அந்த உறைக்குள் ஒரு கற்றைக் காகிதங்கள் நூலில் வரிசையாகக் கோர்க்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தன. அதை வராகசாமி பரபரப்போடு எடுத்துப் பிரித்து எல்லாவற்றிற்கும் மேலே இருந்த காகிதத்தைப் பார்த்தான் அதன் தலைப்பில் அடியில் வருமாறு எழுதப்பட்டிருந்தது:-

திருவல்லிக்கேணி ஐஸ்ஹவுஸ் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் சமயசஞ்சீவி ஐயர், வக்கீல் வராகசாமி ஐயங்கார் அவர்களுக்குக் கடிதம் - என்றிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/257&oldid=1252433" இலிருந்து மீள்விக்கப்பட்டது