பக்கம்:மேனகா 2.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

260

மேனகா

சாம்பசிவையங்காரே இந்த ஊருக்கு வந்திருந்தார். அவரிடம் மேற்படி தந்தியின் விஷயமாக நாங்கள் பேசியதிலிருந்து, அவர் சென்னைக்கு வரவில்லை யென்றும் பெண்ணை அழைத்துக் கொண்டு போகவில்லை என்றும் நாங்கள் உணர்ந்து கொண்டோம். அந்த விஷயமும் என்னுடைய நினைவுக்கு வந்தது. இவர்கள் மரைக்காயருக்கு விற்ற பெண், உங்களுடைய மனைவிதான் என்று நான் உடனே நிச்சயித்துக் கொண்டேன். அதன் பிறகு மேற்படி மரைக்காயர் வீட்டுக்குப் போனேன். அவர் நாகைப்பட்டணத்துக்குப் போயிருப்பதாக அங்கிருந்த வேலைக்காரன் கூறினான். அந்த மரைக்காயரின் மாமனார் சென்னைத் துரைத்தனத்தின் நிருவாக அங்கத்தினர்களில் ஒருவரான பெரியதம்பி மரைக்காயர் என்பதைக் கேள்விப் பட்டு அவரிடம் சென்றேன். அவரைக்கண்டு அவரிடம் இந்தக் கடிதங்களிற் குறிக்கப்பட்ட விஷயங்களைத் தெரிவித்து அவருடைய வீட்டில் உங்களுடைய மனைவி இருக்கிறாளா வென்று விசாரித்தேன். அவர் இந்தக் கடிதங்களில் காணப்பட்ட விஷயங்கள் உண்மையானவை யென்று சொன்னார். அவருடைய மகள், மேனகா வென்னும் பெண்ணை நடு இரவில் தமது பங்களாவுக்கு அழைத்து வந்தாள் என்றும், அவள் சில நாட்கள் வரையில் நோய் கொண்டு படுத்த படுக்கையாக தமது பங்களாவில் இருந்தாளென்றும், இராயப்பேட்டை வைத்தியசாலையின் டாக்டர் துரைஸானி அடிக்கடி வந்து சிகிச்சை செய்துவந்தாள் என்றும், துரைஸானியின் அனுமதிப்படி அவளும் தமது மகளான கோஷா ஸ்திரீயும் கடல் காற்று வாங்கும்படி மோட்டார் வண்டியில் கடற்கரைக்குப் போனார்களென்றும், அங்கே தற்செயலாக ஒருவர் மீது மோட்டார் வண்டி ஏறியதைக் கண்டு மேனகா மயக்கமடைந்தாளென்றும், அதன் காரணத்தை கேட்டறிந்த துரைஸானி நீங்களே மோட்டாரில் அறைபட்டவர்களென்று மேனகாவுக்குச் சொன்னதாகவும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/261&oldid=1252437" இலிருந்து மீள்விக்கப்பட்டது