பக்கம்:மேனகா 2.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பழம் நழுவி பாலில் விழுந்தது

267

யிருந்தாலும் சரி, நீங்கள் இப்போது அதைப் பாராட்டினால் உங்களுடைய உயிருக்கே ஒரு வேளை ஆபத்து வந்தாலும் வந்துவிடும். வேண்டாம், வேண்டாம்; படுத்துக் கொள்ளுங்கள்” என்று சாந்தமாகவும் அன்போடும் கெஞ்சி மன்றாடினாள். ஆனால், விஷயம் என்னவென்பதைக் கேட்க அவள் துணியவில்லை. அவளது இங்கிதமான கனிமொழியைக் கேட்டும் அவனது கோபம் சிறிதும் தணிவடையவில்லை. என்றாலும், முழங்காலில் நோயுண்டானமையால் அவன் தலையணைகளிற் சாய்ந்து படுத்துக் கொண்டான். ஆனால், கைகளும், கால்களும், உதடுகளும் கண்களும் துடித்துக் கொண்டிருந்தன. ஒரே நொடியில் அவன் ஆயிரங் காரியங்களைச் செய்ய நினைத்தான்; ஆனால், எழுந்திருக்க மாட்டாமையால் இடுப்பொடிபட்ட நாகப்பாம்பைப்போல அவன் இருந்த இடத்திலிருந்தே சீறினான். “ஆகா! கடைசியில் நீ சொன்னபடியே காரியம் முடிந்திருக்கிறது! இதைப் படித்துப் பார்” என்று கூறிய வண்ணம் அந்தக் காகிதக் கற்றையை எடுத்து அவள்மீது வீசி எறிந்தான். அவள் அதை விரைவாக எடுத்தாள். எடுக்கும் போதே அவளது கைகால்களும் உடம்பும் நடுங்கின. பணிமகள் கடிதத்தையும் மற்ற காகிதங்களையும் ஐந்து நிமிஷத்தில் படித்து முடித்தாள். அவளது முகம் உடனே மாறுபட்டது. ஆனால், அவள் அப்போதும் சந்தோஷமடைந் தாளோ, அல்லது வருந்தினாளோ வென்பது அவளது முகத்தோற்றத்தினால் அறிந்துகொள்ளக் கூடாமலிருந்தது; அவளது கண்களில் கண்ணீர் வழிந்தது. என்றாலும், அவள் பணிவாகவும் நயமாகவும் பேசி அவனது ஆவேசத்தையும் ஆத்திரத்தையும் தணிக்க முயன்றாள். "நான் நினைத்தபடியே விஷயம் முடிந்தாலும் இதைப்பற்றி ஒரே காலத்தில் என் மனதில் இன்பமும் துன்பமும் உண்டாகின்றன. உங்களுடைய மனைவி கடைசி வரையில், மாசற்ற கற்புடையவளாயிருந்தா ளென்பதை உங்கள் மனம் திருப்தி யடையும்படி ஈசுவரனே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/268&oldid=1252444" இலிருந்து மீள்விக்கப்பட்டது