பக்கம்:மேனகா 2.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பழம் நழுவி பாலில் விழுந்தது

269

விட்டார்கள் கொலை பாதகர்கள்! அந்தக் கிராதகன் சாமாவையனாலல்லவா இவ்வளவும் நடந்திருக்கிறது! இது வரையில் அவனை யோக்கியன் என்றல்லவா நினைத்து மோசம் போனேன்! அடாடா! என்னுடன் கூடப்பிறந்தவர்கள் இப்படியும் செய்வார்களா! என்ன ஆச்சரியம்! என்ன ஆச்சரியம்! உலகத்தில் இப்படியும் நடக்குமா!” என்ற கூறித் தனது விழியையும் மனதையும் ஒரே நிலையில் நிறுத்தி அப்படியே வியப்படைந்து வெறுவெளியை நோக்கினான். கால் நாழிகை வரையில் அவன் அப்படியே ஒவியம் போல் அசைவற்றிருந்தான். அவனது மனைவியின் கலியாண குணங்களும், அருமை பெருமைகளும், அவளது அற்புத வடிவமும் அவனது அகக்கண்ணில் தோன்றின. அவனது நினைவு முற்றிலும் மனைவியின் மீது திரும்பியது. அவன் வாய்விட்டுப் பிதற்ற ஆரம்பித்தான். “ஆ மேனகா! என் கண்ணே! என் பாக்கியமே! பரிசுத்த ஸ்வரூபிணியான உன்னை அடைய நான் யோக்கியதை அற்றறவனென்று நினைத்து நீ தற்கொலை செய்து கொண்டாயோ! ஐயோ! உன்னுடைய வயிற்றெரிச்சல் வீணாகுமோ! உன்னுடைய சாபம் ஏழேழு தலை முறைக்கும் விலகுமே! நான் எத்தனை ஜென்ம மெடுத்து எவ்வளவு தவம் செய்தாலும், உன்னைப் போன்ற விலையில்லா மாணிக்கத்தை நான் பெறுவேனோ! என்னைப் போன்ற பாதகன், துர்பாக்கிய சிகாமணி, தரித்திர மூதேவி இந்த உலகத்திலேயே ஒருவனும் இருக்க மாட்டான். கேவலம் நாயினும் கடையவனான என்னிடத்தில் மகா லக்ஷுமியைப் போன்ற உத்தமி ஏன் நிலைத்து நிற்பாள்” என்று கூறினான். அவனது விசனம் காட்டாற்று வெள்ளம்போலப் பொங்கி யெழுந்து அவனை அழுத்தியது; மூர்ச்சித்து அப்படியே விழுந்து விட்டான். அப்போது அருகில் நின்ற அருங்குண அணங்கு அதைக் கண்டு பெரிதும் கலக்கமடைந்து துடிதுடித்து, அவனது மூர்ச்சையைத் தெளிவிக்கத் தேவையானவற்றைச் செய்தாள்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/270&oldid=1252446" இலிருந்து மீள்விக்கப்பட்டது