பக்கம்:மேனகா 2.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

272

மேனகா

உங்களுடைய சகோதரிமார்களிடத்திலும் அப்புறம் பேசிக்கொள்ளலாம். இப்போது நீங்கள் அவர்களுடன் பேசுவதே கூடாது. நான் சொல்வதைத் தயவு செய்து கேளுங்கள்” என்று உருக்கமாகக் கூறி வேண்டினாள். மிகவும் இளகிய மனதையும், குழந்தையைப் போன்ற கபடமற்ற குணத்தையும் உடையவனான வராகசாமி தனக்குப் பேருபகாரம் செய்து வந்த அந்த வசீகர மங்கையின் சொல்லை மீற மாட்டாமல் சிறிது தணிவடைந்து திண்டில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டு உள்ளூற வருந்திப் பாகாய் உருகி ஓய்ந்து போனான். அவள் மேன்மேலும் அவனைத் தேற்றிக் கொண்டே இருக்க, அவன் கால் நாழிகையில், உணர்வற்று அப்படியே உறங்கிப்போய் கடுந்துயிலில் ஆழ்ந்தான். அவ்வாறு ஒரு மணி நேரம் கழிந்தது. அவன் திரும்பவும் விழித்துக் கொண்டான். பணிப்பெண் ஈரத்துணியால் அவனது முகத்தைத் துடைத்து நன்றாகச் சுத்தி செய்துவிட்டவளாய், “உடம்பு எப்படி இருக்கிறது? சொல்லுங்கள்: வைத்திய சாலையிலிருந்து நல்ல மருந்துகளை வரவழைக்கிறேன்” என்று கூறினாள். வராகசாமியோ அவளது சொல்லைக் காதில் வாங்கவில்லை. அவனது மனது முற்றிலும் மேனகாவின் மீதே சென்றிருந்தது. கண்கள் வெற்றிடத்தை உற்று நோக்கியவண்ண மிருந்தன. அவனது மனதில் பலவகைப்பட்ட நினைவுகள் தோன்றி மறைந்து கொண்டிருந்தன. கண்களில் கண்ணிர் ஊறி ஊறிப் பெருக்கெடுத்தது. அவன் கைகளால் தனது முகத்தைப் புதைத்துக் கொண்டவனாய், “மேனகா! மேனகா!” வென்று பிதற்றிக் கோவெனக் கதறியழத் தொடங்கினான்; சிரசிலும் மார்பிலும் அடித்துக்கொண்டு புலம்பி அழ ஆரம்பித்தான்; அடுத்த நிமிஷம் பற்களை நறநறவென்று கடித்து, “ஆகா! இப்படியா செய்தீர்கள்!” என்று கர்ச்சிக்கிறான். அவனிருந்த அறையின் கதவுகள் மூடப்பட்டிருந்தமையால், அவன் செய்த ஒசை அப்புறம் கேட்கவில்லை. அவனது பரிதாபகரமான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/273&oldid=1252449" இலிருந்து மீள்விக்கப்பட்டது