பக்கம்:மேனகா 2.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கூ! கூ! திருடன்! திருடன்!

305

அச்சத்தினால் மருண்டு மருண்டு விழித்தான். சஞ்சீவி ஐயரைக் கண்டவுடன் அவன் மிகவும் பரிதாபகரமான குரலில், “சாமி! மொதல்லே கொஞ்சுண்டு தண்ணி வேணும்; நான் திருடவல்லீங்க; என்னை அடிச்சுக் கொன்னுபுட்டாங்க” என்று தடுமாற்றத் தோடு கூறி மன்றாடிய வண்ணம் கீழே சாய்ந்துவிட்டான்.

அந்தப் பரிதாபகரமான காட்சியைக் கண்ட சஞ்சீவி ஐயர் இரக்கங்கொண்டு தண்ணீர் வரவழைத்து அவனுக்கு உடனே கொடுத்துப் பருகுவிக்கும்படி செய்தார். ஐந்து நிமிஷத்தில் அவனது மூர்ச்சை தெளிந்தது; அவன் உடனே எழுந்து சஞ்சீவி ஐயரைப் பார்த்துக் கைகுவித்து, “சாமி! எசமாங்களே! ஒங்க புள்ளெகுட்டிங்க சொகமாயிருக்கணும்; என் உசிரெக் காப்பாத்தினிங்க: மவராசா! நான் திருடவல்லீங்க, நான் இருக்குறது செங்கப்பட்டுங்க” என்றான்.

சஞ்சீவி ஐயர், “அடே! பொய் சொல்லாதே; பொய் சொன்னால் இந்தப் பயல்கள் உன்மேல் நாயைப்போல விழுந்து கடித்து விடுவார்கள்: செங்கல்பட்டிலிருந்து இந்தப் பங்களாவுக்கு என்ன காரியமாக வந்தாய்? பங்களாவுக்கு வந்தவன் மற்ற இடங்களுக்குப் போகாமல், பொக்கிஷம் வைக்கும் அறைக்குப் போன காரணமென்ன?” என்றார். உடனே அந்த மனிதன், “நான் ஒரு அம்மாளுக்குக் கடுதாசி கொண்டாந்திருக்கிறேனுங்க. அந்த அம்மா இஞ்கே இருக்றாங்கன்னு சொன்னாங்க. வளிதெரியாமே உள்ளற வந்து புட்டேனுங்க: என்னெக்கண்டு திருடன் திருடன்னு ஆரோ கூவினாங்க. எனக்கு பயமா இந்திச்சு; ஒடினேனுங்க” என்றான். அதைக் கேட்ட யாவரும் ஆச்சரியமும் இரக்கமுங் கொண்டனர்.

உடனே சமய சஞ்சீவி ஐயர், “அடே! எந்த அம்மாளுக்கு கடுதாசி கொண்டுவந்தாய்? எடு அதை” என்றார்.

மே.கா.II-20

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/306&oldid=1252482" இலிருந்து மீள்விக்கப்பட்டது