பக்கம்:மேனகா 2.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டம்பாச்சாரி விலாசம்

41

வெளியேற்றிவிடவும், அதன் பிறகு தாமும் தமது மனைவியும் பெருஞ் செல்வத்துடன் சுகமாக வாழலாமென்று செய்யப்பட்ட இவ்வித நினைவுகளில் இப்போது ரயிலில் சாய்ந்திருந்த வண்ணம் தமது சிந்தையைச் செலுத்தி அவைகளில் ஈடுபட்டவராய் இரவு பத்தரை மணிக்கு மாயாவரம் வந்து சேர்ந்து வண்டியை விட்டு இறங்கினார். திருவாரூருக்குப் போக ஆயத்தமாக வண்டிகள் வெற்று வண்டிகளாக இருந்தன. சிலவற்றில் இரண்டொரு மனிதர் உட்கார்ந்தும், படுத்து மிருந்தனர். வெறுமையாயிருந்த ஒரு வண்டியில் சாமாவையர் மூட்டையை வைத்தார். அந்த ரயிலில் திருவாரூர் போய்ச் சேர இரவு ஒரு மணியாகும் ஆதலால், தாம் வெற்று வண்டியிலிருந்தால், கவலையின்றி சிறிது துயிலலாமென்று நினைத்தே ஐயரவர்கள் ஏகாந்தத்தை நாடினார். வேறு எவரும் வராமல் தடுக்கும் நோக்கத்துடன் அவர், காலடி வைக்கும் பலகையில் நின்றார். முதல் மணி அடிக்கப்பட்டது. புகை வண்டி ஊதியது. இரண்டாவது மணியும் அடிக்கப்பட்டது. அதற்குமேல் எவரும் வரமாட்டார்களென்று நினைத்த சாமாவையர் உட்புறம் சென்று கதவை மூடித் தாளிட்டுக் கொண்டு கதவி லண்டையில் உட்கார்ந்தார். அடுத்த நிமிஷத்தில் ஒரு யெளவன மங்கை, “இதோ இந்த வண்டியில் ஏறலாம்” என்று சொல்லிக்கொண்டே விரைவாக வந்து, சாமாவையர் இருந்த வண்டியின் கதவைத் திறந்து வண்டிக்குள் ஏறினாள். சாமாவையர் உடனே எழுந்து கடைசி யிடத்தில் உட்கார்ந்து கொண்டார். முதலிடத்தில் அந்த அணங்கு உட்கார்ந்தாள். அவளுக்குப் பின்னால் வந்த இன்னொரு மனிதன் ஒரு டிரங்குப் பெட்டியையும் ஒரு கூஜாவையும் உட்புறம் வைத்து விட்டுக் கதவைச் சாத்தித் தாளிட்டவனாய் வெளியில் நின்று, “அம்மா கமலம்! பத்திரமாகப் போய்ச் சேர். நாளைக்கு வருகிறேன். ஸ்டேஷனில் இறங்கும்போது சாமான்களை விட்டு விடாதே! தூங்கி விடாதே!” என்று சொல்லி எச்சரித்துவிட்டு, சாமாவையரைப் பார்த்துக் கைகுவித்து வணங்கி, “சுவாமிகள் எந்த ஊருக்குப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/43&oldid=1251856" இலிருந்து மீள்விக்கப்பட்டது