பக்கம்:மேனகா 2.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

மேனகா

வண்டி ஒரு கட்டிலைப்போலவும், நீல நிறத்தைக் கொண்ட களங்கமற்ற ஆகாயப் பரப்பு, அக்கட்டிலின் மேல் விரித்த அஸ்மான கிரிபோலவும் காணப்பட்டன. ஆகாயத்தில் அதிவேகமாக யேர்டிய சந்திரன் சாமவையரைப்பார்த்து, “ஒய்! ஐயரே! நீ நினைக்கும் திருட்டு நினைவை நான் நன்றாக அறிந்துகொண்டேன். இதோ ஒடிப்போய் இந்த விஷயத்தை உம்முடைய மனைவி மீனாட்சியம்மாளிடம் சொல்லி விடுகிறேன். பாரும்” என்ற கூறி, அவரை மிரட்டுவதைப்போல இருந்தது. ரயில் வண்டியிலிருந்த மற்ற யாவருக்கும் அந்தக் குளிர்மாமதி இனிமையையும்; சுகத்தையும் குளிர்ச்சியையும், அமுதத் துளிகளையும் வாரி வாரி வழங்கினதாயினும், என்ன காரணத்தினாலோ சாமாவையர் ஒருவரிடம் மாத்திரம் வருமம் பாராட்டி, அவர்மீது நெருப்பு மழை பொழிந்து அவரது தேகத்தைச் சுட்டெரித்தது. நிலவு பகலைப் போலவும் பாலைப்போலவும் எங்கும் தவழ்ந்தது. இரு புறங்களிலும் செழித்து வளர்ந்திருந்த நெற்பயிர், ஒவ்வொரு படி நெல்லைக் கொண்ட கதிர்களைச் சுமந்து தென்றற் காற்றிலசைந்து ஒலித்துக் கீழே சாய்ந்தது. “சாமாவையரே! உம்மைப் பார்க்கவும் கண் கூசுகிறதே!” என்று ஒலமிட்டு வெட்கத்தினால் தலையைக் கீழே தாழ்த்திக் கொள்வதுபோ லிருந்தது. இடையிடையே தோன்றிய தென்னஞ்சோலைகளிலும், மாஞ்சோலைகளிலும், குயில் முதலிய பறவைகளும் ஏனைய ஜெந்துகளும் இயக்க மொடுங்கியவையாய் உணர்வற்று துறவிகளைப்போலப் பரம்பொருளி லீடுபட்டு, மெல்ல வீசிய தென்றலால் தாலாட்டப்பட்டு சிற்றாறுகள், நீரோடைகள் முதலியவற்றி லுண்டான சங்கீத வொலியால் மயங்கி அநந்தத் துயிலில் ஆழ்ந்திருந்தன வாயினும் சாமாவையரது வருகையால் திடுக்கிட்டு விழித்து அவரது நடத்தையைக் கண்டு பொறாமல் சிலும்பின. தென்னந் தோப்புகள் இளநீர்க் குலைகளால் அலங்கரிக்கப்பட்ட கலியாணப் பந்தலைப்போலவிருந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/50&oldid=1251863" இலிருந்து மீள்விக்கப்பட்டது