பக்கம்:மேனகா 2.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மலையாள பகவதி

59

நேரத்தில் ஐந்து வருஷம் பழகினவரைப்போலாயினர். அந்த நிலைமையில் வண்டி அடுத்த ஊரில் வந்து நின்றது. எப்போது புறப்படுமென்னும் ஆவலினால் சாமாவையரது மனம் துடித்தது. மங்கையும் ஒருவகையான அமரிக்கையின்மையைக் காட்டி, “இந்த முள்ளிக்காய் ஸ்டேஷனில் வண்டி இவ்வளவு நேரம் நிற்கிறதே!” என்று கூறி நெடுமூச் செறிந்தாள். தமது மனநிலைமையைப் போலவே அந்த மோகனாங்கியின் நிலைமையும் இருத்தலைக்கண்ட ஐயர் இன்பக்கனவு கண்டு மனக்கோட்டை கட்டினார். “இந்த எஸ்.ஐ.ஆர் வண்டியே இப்படித்தான்; சுத்தப் பிணம். இதற்கு ஏற்படும் ஸ்டேஷன் மாஸ்டர்களும் துங்கு மூஞ்சிகள். ஒட்டுகிறவர்களோ அன்றாடங்காய்ச்சிகள்” என்று சரமாரியாகத் திட்ட ஆரம்பித்தார்.

அவரது மனம் குளிரும்படி வண்டி உடனே நகர்ந்தது. “அப்பாடா! அது புறப்பட்டதையா!” என்று குதூகலத்தைக் காட்டினார் ஐயர்.

சென்ற சில நிமிஷங்களாக ஐயரின் பாதங்கள் அவளது பாதங்களை நோக்கி நகர்ந்து மெல்லப் பிரயாணம் செய்து கொண்டே யிருந்தன. அந்த நிலைமையில் அவர் அவளிடம் சம்பாஷணையை வளர்த்துக் கொண்டிருந்தவர் வண்டி புறப்பட்ட பின்னர், “ஏனம்மா! நீ இப்போது எந்த ஊரிலிருந்து வருகிறாய்?” என்று கேட்டார். “நான் கொறநாட்டிலிருந்து வருகிறேன்” என்றாள் தையல். “கொறநாடு தான் உன்னுடைய புருஷன் வீடோ?” என்று ஐயர் நயமாகக் கேட்க, அம்மாள் சிறிது நாணித் தயங்கி, “இல்லை அது மாமன் வீடு; எனக்கு இன்னம் கலியான மாகவில்லை” என்றாள். அந்த நல்ல செய்தியைக் கேட்ட ஐயருக்குப் பேருவகையால் அங்கம் பூரித்தது; அவரது பாதங்கள் இன்னம் சிறிது தூரம் முன்னுக்குச் சென்றன. “உன்னுடைய பெயரென்ன அம்மா? ஆம் ஆம்; நான் மறந்துவிட்டேன். கமலமென்று உன்னுடைய மாமன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/60&oldid=1251895" இலிருந்து மீள்விக்கப்பட்டது