பக்கம்:மேனகா 2.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது




20 வது அதிகாரம்

சமயசஞ்சீவி ஐயர்


மைலாப்பூரில் கடற்கரையின் ஒரத்தில் சென்ற அகன்ற சாலையில் அழகிய பெருத்த பல பங்களாக்கள் அடுத்தடுத்து அமைந்திருந்தன. அவற்றின் வாயில்கள் கடல்முகமாய் இருந்தமையின், இனிய காற்று, பங்களாக்களின் உட்புறத்தில் எப்போதும் ஜிலுஜிலென்று வீசி, அவற்றில் வசிப்போரை ஆநந்த சாகரத்தில் ஆழ்த்தி வந்தது. இத்தகைய உன்னதமான பங்களாக்கள் ஒன்றிலேதான் பெண்ணரசியான நமது நூர்ஜஹானுடைய தந்தை கான் பகதூர் பெரிய தம்பி மரக்காயர் வசித்து வந்தார். அவர் தலைமுறை தலைமுறையாகப் பெருத்த செல்வந்தராக இருந்தவர்களின் குடும்பத்தில் தோன்றிய சீமான்; நற்குணம், நல்லொழுக்கம், திறமை, கல்வி முதலிய சிறப்புகள் வாய்ந்த உண்மையான பெரிய மனிதர்; முன்னரே கூறப்பட்டபடி அவர் சென்னை துரைத்தனத் தாரின் நிருவாக சபையில் ஒரு அங்கத்தினராவர்; அவர் அதற்குமுன் பல ஜில்லாக்களில் கலெக்டர் உத்தியோகம் செய்து யாவராலும் நன்கு மதிக்கப் பெற்றவர். அவருக்கு வயது ஐம்பதிருக்கலாம். கட்டுத்தளர்வடையாத தடித்த உடம் பையும் சிவப்பு நிறத்தையும் கொண்டவர். பதற்ற மில்லாத நிதானகுணமும் உண்மையான மனவுருக்கமும் வாய்ந்தவர். அவருக்கு ஆண்மக்கள் பிறக்கவில்லை. அலிமாபீவி, நூர்ஜஹான் என்னும் இரண்டு அரிய பெண் மக்களையே அவர் பெற்றிருந்தார். அவர்களை அவர் இரண்டு உலகங்களாக மதித்து, தமது உயிரையே அவர்களின்மீது வைத்திருந்தார். அவர்களை ஊட்டி

மே.கா.II-6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/82&oldid=1251931" இலிருந்து மீள்விக்கப்பட்டது