பக்கம்:மொழியின் வழியே.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 மொழியின் வழியே!

வாக்கிய அழகும் முறையும்

சொற்கள் வரிசைப்பட்டு நிற்கும் முறையால்தான் வாக்கியத்துக்கு அழகு வருகிறது. சொற்கள் வரிசைப்படாது நின்றோ, இடம் மாறி நின்றோ, உணர்த்துகின்ற பொருள்கள் வேறுபாடோ, மாறுபாடோ, உடையனவாக இருக்கும். ஒரே பொருளுக்குப் பல தொனிகள் உண்டு. 'கோவலனைத் தன் முன் கண்டதும் கண்ணகி மெல்ல நகைத்தாள் - இந்த வாக்கியத்தை இப்படி எழுதினால் கண்ணகியின் சிரிப்பு மட்டும்தான் உணர்த்தக் கருதிய முக்கியமான பொருள். 'கோவலனைக் கண்ட அளவில் கண்ணகி நகைத்தாள் - என எழுதினால், சிரித்தது எப்போது என நேரத்துக்கு முக்கியத்துவம். கோவலன் கண்ணகியின் முகத்தில் நகையைக் கண்டான் - என எழுதினால் சிரிப்பைக் கோவலன் கண்டு கொண்டதற்கு முக்கியத்துவம். 'கோவலனைத் தன்முன் கண்டதும் கண்ணகியால் நகைக்காமல் இருக்க முடிய வில்லை' - என்று வாக்கியம் அமையுமானால் கண்ணகியின் ஆற்றாமைக்கு முக்கியத்துவம். - தோட்டக்காரனுக்கு எந்த இடத்தில் எந்தச் செடியும், மரமும், கொடியும் இருக்குமென்று தெரிவது போல் எந்த இலை எந்தச் செடியினுடையதென்று பழக்கமிருப்பதுபோல், வாக்கியமெழுதுகிறவனுக்கும், படிக்கிறவனுக்கும் பொருளை ஆக்கவும், உணரவும் பழக்கமிருக்கும். அந்தப் பழக்கத்துக்குத் தடுமாற்றமோ, மயக்கமோ, இல்லாமல் உரைநடை அமைவது தான் தெளிவு. அரசனைக் கொலை செய்த அமைச்சன் மகன் வந்தான் என்பதுபோல் எழுதினால் அரசனைக் கொலை செய்தவன்.அமைச்சனா அல்லது அமைச்சன் மகனா என்ற தடுமாற்றம் உண்டாகும். சொற்களின் வரிசை முறை, தடுமாறாத பொருள் அமைப்பு, இவற்றினால்தான் அழகு உண்டாவது இயலும்.