பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

மொஹெஞ்சொ - தரோ


பட்டுள்ளன. இவ் அமைப்பு முறை பிற நாட்டு மட்பாண்டங்கள் மீது காணுமாறு இல்லை என்று அறிஞர் அறைகின்றனர். மொஹெஞ்சொ-தரோவிலும் இம்முறை சில பாண்டங்கள் மீதே அமைந்துள்ளது. வேறு சில பாண்டங்கள் மீது கையால் வட்டங்கள் இழுக்கப்பட்டுள. எனவே, அவ்வட்டங்கள் நன்றாக அமைந்தில.

வேறு பல ஒவியங்கள்

சில தாழிகள் மீது மரங்கள் எழுதப்பட்டுள்ளன. அடிமரத்தைக் குறிக்கத் தடித்த கோடுகளும் கிளைகளைக் குறிக்க மெல்லிய வளைந்த கோடுகளும் இழுத்துவிடப்பட்டுள்ளன. சில பாண்டங்கள் மீது பிறைமதி திட்டப்பட்டுள்ளது. சிலவற்றின் மீது - திறம்படத் திட்டப்பட்டுள்ள சதுரங்க ஒவியம் குறிப்பிடத் தக்கது. ஒரு கட்டம் கறுப்பாகவும் மற்றொன்று சிவப்பாகவும் அளவு பிறழாமலும் வரையப்பட்டிருத்தல் வனப்புடன் காட்சி யளிக்கின்றது. பல பாண்டங்கள் மீது முக்கோணம் ஒன்றாகவும் இரண்டாகவும் மூன்றாகவும் சேர்த்து எழுதப்பட்டுள்ளன.

மட்பாண்ட வகைகள்

மொஹெஞ்சொ-தரோவில் கிடைத்துள்ள மட் பாண்டங்களில் சில வேறெங்குமே இல்லாதவையாக இருத்தல் கவனித்ததற்குரியது. அவை சிந்துப் பிரதேசத்திற்கே உரியவை எனக் கூறல் தவறாகாது. நீர் அருந்தப் பயன்பட்ட பாண்டங்கள், அடியில் குமிழ் போன்ற கூரிய வடிவம் பெற்றுக் காண்கின்றன. அவை நீர் பருகிய பின்னர்க் கவிழ்த்து வைக்கப்பட்டன் போலும்! சில பாத்திரங்கள் அடிப்புறம் தட்டையாகவும் மேற்புறம் திரண்டு கூம்பிய வடிவத்துடனும் காண்கின்றன. இவை பலவகைக் கிண்ணங்கள், சிறு தண்டின்மீது பொருத்தப்பட்ட தட்டுக்கள், சிறிய அகல்கள், சிறிய மூக்குடைய ஏனங்கள், தட்டுகள், தாம்பாளங்கள், வட்டில்கள், படிக்கங்கள்,