பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிந்துவெளி மக்கள் யாவர்?

231


வளர்த்து வந்தனர்; பலவகைக் கலைகளை வளர்த்து வந்தனர்; சுகாதர முறையில் நகரங்களை அமைத்துப் பெருவாழ்வு வாழ்ந்து வந்தனர் பலவகை வழிபாட்டு முறைகளைக் கொண்டிருந்தனர்; ஆனால், அதே காலத்தில் ஒரே கடவுள் உணர்வையும் பெற்றிருந்தனர் என்பது பொருந்தும்); மறு பிறப்பைப் பற்றிய உணர்ச்சி பெற்றிருந்தனர்; யோகநிலையை உணர்ந்து இருந்தனர்; இவற்றையும் அறிந்திருந்தனர்; சக்தி வணக்கம், சிவ வணக்கம், மர வணக்கம், விலங்கு வணக்கம் முதலியவற்றைக் கொண்டிருந்தனர். சுருங்கக் கூறின், ‘அவர்களிடம் இன்றைய இந்து சமயத்தில் உள்ள பெரும்பாலனவும் இருந்தன’ எனல் முற்றும் பொருந்தும்.[1]

ஆரியர்

ஆரியர் என்று பெயரிடப்பட்ட மக்கள் ஐரோப்பா, பாரசீகம், இந்தியா முதலிய இடங்களிற் குடிபுகுந்தனர்; அவர்களுடைய மொழி முதலில் ஒன்றாக இருந்தது; பின்னர்க் குடிபுகுந்த இடத்தில் இருந்த பண்டை மக்கள் கலப்பாலும் உச்சரிப்பாலும் பிற காரணங்களாலும் நாளடைவில் சிற்சில: மாறுபாடுகளைப் பெற்றுவிட்டது; மொழி மாற்றத்துடன் மக்கட் கலப்பும் உண்டானது. இஃது உலக இயற்கை என்பது முன்னரே கூறப்பட்டது. இது நிற்க, இந்தியா புகுந்த ஆரிய மக்களின் காலம் பற்றிப் பலர் பலவாறு கூறியுள்ளனர். ஆயினும், சிறந்த ஆராய்ச்சியாளர் பலரும் கி.மு. 1500க்குச் சிறிது முற்பட்ட காலத்தையே கூறுகின்றனர். பேராசிரியர் நிருபேந்திரகுமார டட் என்பவர், பலர் கூற்றுகளைத் திறம்பட ஆராய்ந்து, பல காரணங்களைக் காட்டி ஆரியர் இந்தியாவிற்கு வந்த காலம் ஏறக் குறையக் கி.மு.2500 ஆகலாம் என்றும், அவர் செய்த ரிக் வேதத்தின் காலம் கி.மு.2500 கி.மு1500 என்றும் விளக்கியுள்ளார்.[2]


  1. Mohenjo-Daro, and The Indus Civilization, ‘Vol.I.p.77.
  2. Prof.N.K.Dutt’s ‘Aryanisation of India’, pp. 39, 65.