பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிந்துவெளி மக்கள் யாவர்?

249


பஞ்சாபிலிருந்து ஒரியாவரை பேசப்படுகின்ற பல்வேறு வட இந்திய மொழிகள் இலக்கண அமைப்பில் தென்னிந்திய மொழிகளையே ஒத்துள்ளன. பால், எண், வேற்றுமையுருபுகள் பெயர்களோடு பொருந்துதல், எச்சங்கள், வினைச்சொல்லின் பலவகைக் கூறுபாடுகள், வாக்கிய அமைப்பு, சொல் அலங்காரம் இன்ன பிற அம்சங்களில் வட இந்திய மொழிகள் திராவிட மொழிகளையே ஒத்துள்ளன. அம்மொழிகளில் உள்ள ஒரு வாக்கியத்தை எழுதி, அதில் உள்ள சொற்களுக்குப் பதிலாகத் தமிழ் முதலிய திராவிட மொழிச் சொற்களைப் பெய்தால், வாக்கியம் ஒழுங்காகவே காணப்படுகின்றமை கவனிக்கத்தக்கது’. இம்முறை வடமொழியிலோ பிற இந்து-ஐரோப்பிய மொழிகளிலோ இயலாத செயலாகும். ‘ஒரு மொழி பிற மொழியினின்றும் பெரும்பாலான சொற்களைக் கடனாகப் பெறலாம். ஆனால், அதன் இலக்கண அழைப்பு முறை ஒருபோதும் மாறாது’ என்பது ஒப்பிலக்கண ஆராய்ச்சியாற் போந்த உண்மையாகும். இவ்வுண்மைப்படியே இன்றுள்ள வட இந்திய மொழிகள் இருந்து வருகின்றன; அஃதாவது, அவை ஆரியர் வரவுக்கு முன் திராவிட மொழிகளாக இருந்தவை, இன்று ஆரியர் மொழியால், அடிப்படையில் திராவிடமாகவும், மற்றதில் ஆரியமாகவும் இருக்கின்றவை என்பதாம். ‘வடமொழி ஒருபோதும் பேசப்பட்ட மொழி (Vernacular) அன்று. அதனை ஒரு வகுப்பார் மொழி’ என்று டாக்டர் மாக்டொனெல் தாம் எழுதியுள்ள ‘வடமொழி இலக்கியம்’ என்னும் நூலில் கூறியுள்ளார். எனவே அது வடஇந்திய மொழிகளின் பிறப்புக்குரிய பேச்சு மொழியாக இருந்திரா தென்பது தெளிவு. வடமொழியோடு வடஇந்தியத் திராவிட மொழிகள் பல ஆயிரம் ஆண்டுகளாகத் தொடர்பு கொண்டிருந்தமையால், அவை தம் பண்டை உருவை இழந்து, ஆரியம் பரவாமையால் பண்டை நிலையில் பேரளவு உள்ள தமிழ் முதலிய மொழிகளோடு வேறுபட்டனவாக மேற் போக்கில் காணப்படுகின்றன. இம்மேற்போக்கான நிலையை மட்டுமே கவனித்து, ‘வட இந்திய மொழிகள் வேறு-தென் இந்திய மொழிகள் வேறு’ என்று ஆழ்ந்த அறிவற்ற சிலர்