அஜகீதம்
பாஸ்கரனை எப்படி வேண்டுமானாலும் கூப்பிடலாம். அவன் தகப்பனார் அவனை, "ஏ கழுதை, இங்கே வா" என்று அழைப்பார். அவனுடைய நண்பர்கள் அவனைப் பல மிருகங்களின் பெயர்களைக் கொண்டு கூப்பிடுவார்கள். யார் எப்படி அழைத்தபோதிலும் பாஸ்கரன் மட்டும் கோபிப்பதே கிடையாது.
இன்னும் சொல்லப்போனால் அவர்களெல்லாம் அவனை. கழுதை, நாய்' என்று அழைப்பதே அவனுக்குப் பெருமையா யிருந்தது. அவனுடைய பெருமைக்குக் காரணம் உண்டு. நாயைப்போல் குரைப்பான்; "சிம்மத்தைப்போல் கர்ஜிப்பான். இன்னும் எந்தெந்த மிருகம் எப்படி எப்படிக் கத்துகிறதோ, எந்தெந்தப் பட்சி எவ்வெவ்விதம் சப்திக்கின்றனவோ அப்படி யெல்லாம் தத்ரூபமாகச் செய்து காட்டுவான்.
இந்த அதிசய வித்தையை அவன் தானாகவேதான் கற்றுக் கொண்டான். இந்தக் குணம் அவனுக்குப் பிறவியிலேயே அமைந்திருந்தது. அதனால்தான் அவனை எல்லோரும். 'கழுதை, நாய்' என்றெல்லாம் பட்டம் சூட்டி அழைத்தார்கள். அதற்காகவே பாஸ்கரனுக்கு ஒரு சமயம் அவன் பள்ளிக்கூடத்தின் வருஷாந்திர விழாவின்போது ஒரு வெள்ளிக் கோப்பையைப் பரிசாக அளித்தார்கள்.
✽
சென்ற வருஷம் பாஸ்கரன் மேற்கொண்டு படிப்பதற்காகச் சென்னைக்கு வந்தான். தனியாக வாடகைக்கு ஒரு 'ரூம்' எடுத்துக்கொண்டு படிக்க விரும்பினான். ஓர் அறைக்காகச் சென்னை நகரத் தெருக்களைச் சுற்றிப் பார்க்க ஆரம்பித்தான். கடைசியாகப் புரசைவாக்கத்தில் ஓர் இடம் கிடைத்தது. அது அந்த வீட்டு மேல்மாடியில் தெற்கு நோக்கிய அறை.