பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

149

காட்டிக் கொள்ளத் திறமின்றியே மழுங்கிக் கிடக்கிறாள். முத்தம்மா அந்தப் பையனைக் கொண்டு சாட்டையடி கொடுக்கச் சொல்வேன் என்று முழக்கிய சொல் நன்றாகத் தானிருந்தது. ஆனால் அதுவே பெண்ணாகப் பிறந்தால் அவளையும் உடலைக் கொண்டே ஆணினத்தைக் கவரச் செய்து விலையாகச் சாட்டை அடிகளைப் பெற்றுக் கொள்ளச் செய்ய வேண்டும் என்று கூறியது, மைத்ரேயிக்கு அழுகிய கனியை நுகருவதுபோல் இருந்தது. ஒரு பெண்ணின் பிறப்பின் நோக்கமே, உடலும் போகமும்தானா? இறுக்கி இறுக்கிக் கால்போட்டுப் பின்னிய பின்னல் எவ்வளவு நீட்டி விட்டாலும் குறுகியே நிற்கும். மனசே வளைந்து குறுகிப் போயிருக்கிறது. அவள் பிரமை பிடித்தாற்போல் குளியலறை மூலையில் நிற்கையில் கூட்டம் பரபரவென்று கரைகிறது. அநுசுயா வந்து அவளைத் தொடுகிறாள்.

“ஏன், பிரேயருக்கு வரதில்லே, இங்கே நிற்கறே?”

“வரேன் ஒண்ணுமில்லே...”

முகத்தைக் கழுவிப் பொட்டு வைத்துக் கொண்டு அவள் அநுசுயாவுடன் பிரார்த்தனைக் கூடத்துக்கு வருகிறாள். பிரார்த்தனைக் கூடம் புதிய கட்டிடம்.

உள் முற்றம், கூடம் தாழ்வறையைக் கடந்து சமையலறையைப் பார்த்துக்கொண்டே மைத்ரேயி பக்கத்தில் உள்ள வாயிலில் இறங்குகிறாள். அந்த வாயிலுக்கு நேராக பிரார்த்தனைக்கூடம் தெரிகிறது. மேலே ஒளிரும் கொத்து விளக்கில் கண்கூசும் ஒளி இல்லை. எல்லோரும் இரு வரிசைகளாக எதிர் எதிரே அமர்ந்திருக்கின்றனர். முத்தம்மா ஆர்மோனியம் வைத்துக் கொண்டிருக்கிறாள். இரு பக்கங்களிலும் உள்ள குத்து விளக்குகளை ஒருத்தி ஏற்றுகிறாள். சுவரில் பெரிய இராமபட்டாபிஷேகப் படம் விளங்குகிறது. அதைவிடச் சிறிய அளவில் தஞ்சாவூர்பாணிப் படத்தில் கண்ணன் இரு தேவியருடன் காட்சி தருகிறான். கண்ணாடியின் நடுவே சரிகைச் சேலையில் முத்துச் சொருக்குடன் கோலம் கொண்டிருக்கும் மரகத வண்ண மதுரை மீனாட்சி; முருகப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/151&oldid=1102928" இலிருந்து மீள்விக்கப்பட்டது