பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

173

கொண்டு செய்துகொள்ளும் ஒப்பனையினால் கொடுக்க முடியாது. அது வேறு.”

ஒரு மெல்லிய குரல்: “மிஸஸ் சிவநேசன் நர்மதாதேவி... இவங்களைப்போல...” என்று விள்ளுகிறது.

உடனே வாயை மூடிக்கொண்டு பலர் சிரிக்கின்றனர்.

“ராத்திரி எல்லாம் முடியில் கிளிப்புப் போட்டு சுருட்டிக்கு வாளாண்டி, சிவநேசன்” என்று ஒருத்தி கிசுகிசுக்கிறாள்.

“நம்ம விநோத் பையன் முடி எப்படி அழகாய்ச் சுருட்டியிருக்கு...? அது இயற்கை... என்று” குழந்தைப் பிரிவிலுள்ள நான்கு வயசுச் சிறுவன் ஒருவனைக் குறிப்பிடுகிறாள் அதுசுயா.

மைத்ரேயி எழுந்து நின்று, “அப்படி நகை, சேலை மோகத்தை விட்டொழித்துவிட்டால்மட்டும் பெண் உடனே சுதந்தரமாகிவிடுகிறாளா ? இல்லையே? என்னிடம் நகையில்லை; உயர்ந்த ஆடம்பரங்களில்லை; எனினும் என்னால் நகரின் பகுதிகளில் எந்த நேரத்திலும் தனியாகப் போய்வர முடியுமா?” என்று கேட்கிறாள்.

“முடியாதுதான். துரதிர்ஷ்டவசமாக அப்படித்தான் கூற வேண்டியிருக்கிறது மைத்ரேயி. அதற்குப் பெண்கள் அஞ்சாமை என்னும் ஆபரணத்தைப் பூண்டிருக்க வேண்டும். நேருக்குநேர் சந்தர்ப்பங்களை நோக்கும் துணிவுடையவர்களாக மாறவேண்டும்; அதற்கு முதற்படியாகத்தான் பலவீனங்களாகிய கனத்தை மடியில் சுமக்கக்கூடாது என்றேன். ஒரு ஆடவன் தவறான எண்ணத்துடன் ஒரு பெண்ணை அணுகுகிறான் என்றால், ஒரு வகையில் அந்தப் பெண்ணும் அதற்குக் காரணமாகிறாள். அப்படி அணுக இயலாதவளாய் ஒரு பெண் மாறமுடியும். அந்த நிலையைப் பெண்கள் மனசு வைத்தாலே கொண்டுவரலாம்.” மைத்ரேயி முன்னைக் காட்டிலும் அதிகமான வேகத்துடன், “இதை என்னால் ஒப்புக்கொள்ள முடியாது. பெண்ணுக்குத் தெய்வம் தண்டனை கொடுக்கிறது; சமுதாயமும் சட்டமும்கூட அவளையே குற்றவாளியாக்குகின்றன. இதெல்லாம் எந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/175&oldid=1100705" இலிருந்து மீள்விக்கப்பட்டது