பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

214

ரோஜா இதழ்கள்

இப்படி எல்லாம் வருவதும் போவதும் உல்லாசம் கொண்டாடுவதும் தான் வாழ்க்கை. மிஸஸ் சிவநேசன், நர்மதா இருவருமே நன்றாகக் குடிப்பார்கள். மேல்நாட்டு நாகரிகப் பொழுதுபோக்கு விடுதிகளில் அவர்கள் உறுப்பினர்கள். நாட்டுத் தலைவர்கள், அயல் நாட்டுப் பிரமுகர்கள் போன்ற வர்கள் வரும்போது இவர்கள் முன்னே நின்று சாய இதழ்களை குவித்தும் விரித்தும் ஆங்கிலத்தில் அப்போதைய ஃபாஷனில் பேசி மிழற்றி இந்தியக் கலாசாரம் பண்பாடு என்று நெற்றியில் குங்குமம் தீற்றுவார்கள். துரைசானிக்குப் புடைவை சுற்றிவிட்டுப் படம் எடுத்துக் கொள்வார்கள். கைகுவிப்பதும் திலகமிடுவதும் போலி மரியாதைப் பண்புக்குச் சிகரங்கள்...”

‘லோகாவைத்தான் அந்தக் குழுவில் பொறுத்துக் கொள்ளலாம். தான் எங்கே நிற்கிறோம் என்ற அறிவும் உணர்வும் அவளுக்கு உண்டு. அதனால் பிறர் தகுதியை அறிந்து அடக்கமாகச் செயல்படுவாள். உன்னை நான் இங்கே விடுவித்து அழைத்து வருவதற்கு அவள்தான் காரணம். அவளாக அந்த எண்ணத்தை வெளியிட்டிராதுபோனால் எனக்குக் கேட்கத் தெரிந்திருக்காது. அவள் அங்கே இருக்க வேண்டியவளல்ல. ராஜா அவளை முழு நேரக் கட்சிப் பிரசார வேலைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று சொன்னார். அவளுக்குப் படிக்க ஆர்வம் இருக்கிறது. உங்களைப் போல் உள்ளவர்கள் அவளை ‘அடாப்ட்’ செய்து கொண்டால் நன்றாக இருக்கும்...ஒரு நல்ல பெண்ணை நல்லபடியாக உருவாக்கியதாக ஆத்மதிருப்தி உண்டாகும் என்றாள். நான் லபக்கென்று கொண்டா பத்திரத்தை என்று பிடித்துக் கொண்டேன். எனக்கே நினைத்துப் பார்த்தால் விசித்திரமாயிருக்கிறது. நீ யாரோ, நான் யாரோ, ஏதோ காற்றில் சிதறிவந்த நீர்த்துளிகள் ஒன்றுபட்டாற்போல்...”

“நான்தான் நீர்த்துளி. நீங்கள் ஆழ்ந்த தடாகம். நான் தடாகத்தில் ஒன்றுபட வந்தேன்...” என்று உளம் விம்ம மொழிகிறாள் மைத்ரேயி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/216&oldid=1101266" இலிருந்து மீள்விக்கப்பட்டது