பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

248

ரோஜா இதழ்கள்

“அந்தக் கல்யாணம் உயிரில்லாததுதான். சட்டப்படி செல்லாதுதான். ஆனால் நான் கன்னிமை காத்து வந்தவள் என்று பொய்யாக நம்பும்படி செய்து என்னை ஒருவருக்குக் கல்யாணம் செய்து கொடுக்க நீங்களா விரும்புகிறீர்கள் ? அக்கா, நான் இங்கிருப்பது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் அதை நேராகச் சொல்லிவிடக்கூடாதா?”

“அசடு, ஏன் இப்படி எல்லாம் நினைக்கிறாய்? அந்தத் தனராஜை இன்னும் நீ மனசில் வைத்துக் கொண்டிருப்பாய் என்பதை நான் எண்ணிப் பார்த்திருக்கவில்லை. நான் ஒரு மாதிரி ஜானகியிடம் நீ வீட்டைத் துறந்து வந்திருப்பதைப் பற்றிக் கூறியிருக்கிறேன். நீ என் இரத்தக் கலப்புச் சோதரியல்ல என்பது அவர்களுக்குத் தெரியும். உனக்குத் தனி வாழ்வு இம் மாதிரியான நிலையில் பத்திரமல்ல என்று நான் கருதுகிறேன். அவர்கள் உடன்படுவதைக் கவனித்தால் பையன் பெருந்தன்மையுடையவனாக இருப்பான் என்று தோன்றுகிறது.”

“தனிவாழ்வு எனக்கு மட்டும் பத்திரமில்லை என்பதை எப்படி நீங்கள் முடிவு செய்தீர்கள்? நான் என்ன..”

படபடப்பாக வரும் சொற்களை உதட்டைக் கடித்து விழுங்கிக் கொள்கிறாள்.

கண்களில் நீர் தளும்புகிறது.

ஏன்? ஏன் அவளுக்கு மட்டும்? அவளை மட்டும் ஏன் பத்திரமில்லாதவள் என்று நினைக்கவேண்டும்? ஒரு ஆணின் கண்களில் அவள் பாலுணர்வைத் தூண்டிவிடும்படியான பிம்பமாகவா விழுகிறாள்?

சீ? !

ஞானம்மா மெள்ள அவளுடைய கையைப் பற்றுகிறாள்.

“நீ நினைப்பதெல்லாம் எனக்குப் புரிகிறது, மைத்ரேயி. பொது வாழ்வும் ஒரு பெண்ணின் இளமையும் எப்போதும் கத்திமுனையில் நடப்பது போன்ற அநுபவமாக இருக்கும் என்பதை நான் நன்றாகத் தெரிந்து கொண்டிருக்கிறேன். இதற்குமேல் நான் சொல்லவேண்டாம் உனக்கு. குடும்ப

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/250&oldid=1100470" இலிருந்து மீள்விக்கப்பட்டது