பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

262

ரோஜா இதழ்கள்


“ஒரு நிமிஷம். நீங்கள் மெள்ள நடந்துகொண்டிருங்கள். நான் பஸ் ஸ்டாப்புக்கு வந்துவிடுகிறேன்” என்று கூறிவிட்டு உள்ளே செல்கிறான்.

மைத்ரேயியின் நடை மிக மெதுவாக நீண்டு செல்கிறது. பெரிய சாலையில் பஸ் நிறுத்தத்துக்குச் செல்லும் வழியில் மைதானத்தைக் கடந்து அவள் சாலையை எட்டுமுன் முரளி அவளை நெருங்கி வருகிறான்.

அவன் புன்னகை செய்கிறான். அவளும் சிரிக்கிறாள். அவன் சிரிப்பு மிக இயல்பாக இருக்கிறது. செயற்கையில்லை.

அவளுடன் கல்லூரியில் படித்த ருக்மணியின் தந்தை ஒரு இராணுவ டாக்டர். அவர்கள் எழும்பூரில் ஓர் அழகிய வீட்டில் இருந்தார்கள். ருக்மணி பார்வையை இழந்த பெண். பிரெய்ல் எழுத்துக்களின் உதவியாலேயே அவள் படித்தாள். அவள் கல்லூரிக்கு வராத நாட்களில் மைத்ரேயி தவறாமல் சென்று பாடங்களைக் கூறி விளக்குவாள்.

“நீ ஏனம்மா இன்னிக்குக் காலேஜுக்கு வரலே ?” என்றால், “எங்கள் வீட்டில் இன்னிக்குத் தகராறுடி. எனக்கு மனசு சரியில்ல...’ என்று கூறுவாள்.

அவள்தான் முதல் குழந்தை. ஒரு கண் மட்டுமே சுமாராகத்தெரிவதுபோலிருக்கும். அவளுக்கு ஒரு தம்பியும் ஒரு தங்கையும் இருந்தனர். அவளுடைய தாய் மிக அழகாக இருப்பாள். உதட்டுச்சாயம், கையில்லா ரவிக்கை நாகரிகங்களுடன் அவள் தான் காரில் ருக்மணியைக் கல்லூரியில் கொண்டு வந்து விடுவாள். ருக்மணிக்கு அரசு தரும் சலுகைகள் அவள் முயற்சி செய்தே கிடைத்திருந்தது. ஒரு நாள் அவள் ருக்மணியின் வீட்டுக்குச் சென்றிருந்தபோது, அவளுடைய தந்தையைப் பார்க்க நேர்ந்தது. அவள் திடுக்கிட்டாற்போல் நின்றாள். கோடுகள் போட்டதோர் இரவு உடையில் வழுக்கைத் தலையும் பிதுங்கிவிடும் போன்ற கண்களும் தொங்கும் மீசையுமாகக் காட்சியளித்த அவருடைய அந்தத் தோற்றத்தை அவளாலேயே இன்னமும் மறக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/264&oldid=1100296" இலிருந்து மீள்விக்கப்பட்டது