பக்கம்:ரோஜா இதழ்கள்.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

295

மாலைகள் வாங்கிவரச் செய்து அவர்களுக்குக் கூட்டம் முடியும் நேரத்தில் போடுகிறான்.

கூட்டம் முடிந்ததும் மேடையை நோக்கிப் படை எடுக்கிறது ஒரு இளவட்டக் கும்பல். தனராஜிடம் கை பழுத்து வாங்கிய பின் அவளிடமும் சிலர் வருகின்றனர்.

“நானென்ன, கையெழுத்துப் போடப் பெரிய ஆளா!...” என்று விரித்து மறுக்கிறாள் அவள்.

“பெரிய ஆளாய் வந்திண்டிருக்கியே!போட்டுக் கொடு!"என்று லோகாவின் கணவர் ஆமோதிக்கிறார்.

குச்சிக் கால்களும் நைலான் தாவணிகளும் அவளையே பாத்துக் கொண்டு நோட்டுப் புத்தகத்தை நீட்டுகின்றனர்.

முதலில் ‘கன்னித் தமிழே வாழி; அறிவும் அன்பும் இருகண்கள்’ என்று எழுதி தனராஜ் கையெழுத்துப் போட்டிருக்கிறான்.

‘தனராஜ், திரைக் கவிஞர்.... மைத்ரேயி எம்.ஏ. நம்ம ஸ்டார் ஸ்பீக்கர்” என்று சீனிவாசன் அவர்களை அறிமுகம் செய்து வைக்கிறான்.

“வணக்கம்..” என்று அவன் கைகுவிக்கும்போது, அவனுடைய மரியாதையும் கொஞ்சமும் காட்டிக்கொள்ளாத பண்பும் அவளைப் பிரமிக்க வைக்கின்றன.

“மிக்க மகிழ்ச்சி. இங்கே பக்கத்தில் பேசவந்தோம். நம்ம பன்னிர்தாஸ் இங்கும் வந்து போகலாம்னு சொன்னாங்க. வரட்டுமா? வணக்கம், வணக்கம்” என்று கைகுவித்துவிட்டு மாலையுடன் செல்கிறான். அவர்களைத் தொடர்ந்து சீனி வாசனும் செல்கிறான்

மணி ஒன்பதரையாகியிருக்கிறது. இலேசான குளிர் உடலில் படிந்து சிலிர்ப்பூட்டுகிறது. அப்போது ஒரு குச்சிக் கால்சராய் முன்னேறி வருகிறான்.

“என்னங்க... !”

“என்னங்க!...”தன்னைத்தான் அவன் அழைக்கிறான் என்பதை அப்போது தான் அவள் உணருகிறாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரோஜா_இதழ்கள்.pdf/297&oldid=1101366" இலிருந்து மீள்விக்கப்பட்டது