உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரோமாபுரிப் பாண்டியன்

105


இவர்கள் எல்லாம் ஏன் சிறைப்பட்டார்கள்?

இவர்களுக்குச் சோழ நாட்டு அரண்மனையில் என்ன பதவி? வீரர்களா? பிரதானியரா? அல்லது நாட்டுப் பெருமக்களா?

செழியன் கேள்விகட்குப் பதில் கூற அங்கே யார் இருக்கிறார்கள்? அவர்களும் செழியனை ஆவலோடு பார்த்தார்கள்.

"யார் புது ஆள்?" என்ற வினாக் குறியை அத்தனை பேர் விழிகளும் எழுப்பிக் காட்டின.

இருங்கோவேள் பேச ஆரம்பித்தான். தவறு! தவறு! கர்ச்சிக்க ஆரம்பித்தான்.

"அடிமைகளே! எத்தனை நாளைக்கு இப்படித் தொல்லை அனுபவிக்கப் போகிறீர்கள்? நீங்களும் எப்படியும் விடுதலையாகப் போவதில்லை. சிறைப்பட்டிருக்கும் போதாவது கஷ்டமில்லாமல் வேதனைப்படாமல் இருக்க வேண்டுமானால், ஒழுங்காக உண்மையைச் சொல்லி விடுங்கள், ஏய், செழியா! முட்டாள் வாலிபனே! பாண்டிய நாட்டு வீரனே! நீயும் உனக்குத் தெரிந்த உண்மைகளைச் சொல்லலாம். கரிகாற் சோழன் தன்னந்தனியாகச் சிந்திப்பதற்கென்று ஒரு ரகசிய இடத்திற்குப் போகிறானாமே! அந்த இடம் எது? இதோ இந்த முட்டாள்கள் அந்த உண்மையைச் சொல்லாமல் உயிர் வேதனை அடைகிறார்கள். செழியா! உனக்குத் தெரிந்தால் நீ சொல்லித் தப்பித்துக் கொள்!"

செழியன் இருங்கோவேளுக்குப் பதில் கூறினான்:

"சோழர் சிந்திக்கும் இடம். ரகசியமான இடம் என்று நீரே சொல்லுகிறீர்? அந்த ரகசியமான இடம் எனக்கும் இவர்களுக்கும் எப்படித் தெரியும்?"

"என்ன ஆணவம்! அடே? இங்கு சட்டம் என்ன தெரியுமா? சோழ நாட்டுக் கைதிகள் யாராவது வாய் திறந்தால் அவர்கள் கரிகாலனைப் பற்றிய உண்மைகளைச் சொல்வதற்கு மட்டுமே வாய் திறக்க அனுமதிக்கப்படுவார்கள். அல்லாமல் 'அய்யோ அப்பா!' என்று கத்துவதற்குக் கூட இங்கு வாய் திறக்கக் கூடாது! தெரிந்து கொள்"

இப்படி ஆத்திரத்தோடு முழங்கிவிட்டு இருங்கோவேள் அதை விட்டு அகன்றான். தீப்பந்தங்களின் கொடிய அனலுக்கு நடுவே சோழநாட்டுக் கைதிகளும் செழியனும் துடித்தவாறு நின்றார்கள்.

இருங்கோவேள் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் அனலில் மயக்கமுற்றுச் சில கைதிகள் 'தடால் தடால்' எனத் தரையில் விழுந்தனர்.