உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரோமாபுரிப் பாண்டியன்

111


கிடக்கும் கைதிகளுக்கு மயக்கம் தெளிவித்து அவர்களுக்கு ஏதாவது உணவு அளிக்குமாறு உத்தரவிட்டாள். அவனும் தாமரையின் உத்தரவுக்குக் கீழ்படிந்து, வேறு சில வீரர்களைச் சேர்த்துக் கொண்டு, மயக்கமுற்றிருந்த கைதிகளுக்கெல்லாம் சிகிச்சை செய்யத் தொடங்கினான்.

பின்னர், செழியன் நிற்குமிடத்திற்கு மெல்ல வந்தாள். அவன் அவளைப் பார்க்காமல் கண்களை மூடிக் கொண்டு தலையை வான் நோக்கி நிமிர்த்தியவாறு நின்றான். தாமரை, அவனுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டுமென்று கருதினாள். அப்படி உதவி செய்வது தன் அண்ணனுக்கு விரோதமில்லையென்றும் அவளே ஒரு முடிவுக்கு வந்தாள். கைதிகளை விடுதலை செய்யவேண்டுமென்பது அவள் கொள்கையில்லாவிட்டாலும் அவர்களைக் கொடுமைப்படுத்துவது அவளுக்குச் சகிக்கவில்லை.

"தண்ணீர் வேண்டுமா?"

ஒரு பெண்ணின் குரல் கேட்டு செழியன் கண்விழித்துப் பார்த்தான். அவன் கண்களை அவனால் நம்ப முடியவில்லை. எதிரே நிற்கும் இந்தப் பெண் யார்? இவளை எங்கே இதற்குமுன் பார்த்திருக்கிறேன்...?

பெருவழுதிப் பாண்டியன் அழைப்பதாகச் செழியனை ஒரு வீரன் வந்து அழைத்தான்; அவனும் உடனே புறப்பட்டான். அரண்மனைக்குள்ளே தனி மாளிகையில் பாண்டியன் ஆழ்ந்த சிந்தனையுடன் உலவிக் கொண்டிருந்தான். செழியனைக் கண்டதும் பாண்டியன் முகமலர்ச்சியுடன் உபசரித்தான்.

"உன்னை ஏன் அழைத்தேன் தெரியுமா"

"தெரியாதே மன்னா?"

"திருமணம் நடைபெறப் போகிறது செழியா!'

"யாருக்கு? எப்போது?"

"உனக்குத்தான் செழியா! பெண்ணெல்லாம் பார்த்து விட்டேன் இதோ பார் மணமகளின் படம்!"

பாண்டியன், அங்குள்ள ஏழெட்டுப் படங்களில் ஒரு படத்தைப் பொறுக்கி எடுத்துச் செழியனிடம் காட்டினான். அந்தப் படத்தைச் செழியன் பார்த்தான். அதில் சிரித்துச் செழித்துக் காணப்பட்ட அந்த அழகியின் உருவத்தை விட்டுக் கண்களை உடனே எடுக்க முடியாமல் அவன் தவித்தான்.

"இந்தப் பெண் யார்? எந்த ஊர்?"